Home இலங்கை அரச ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசி திட்டம்: ஆலை உரிமையாளர்களுக்கான நாடகம்! ஆனந்த பாலித குற்றச்சாட்டு

அரச ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசி திட்டம்: ஆலை உரிமையாளர்களுக்கான நாடகம்! ஆனந்த பாலித குற்றச்சாட்டு

0
image

நாட்டின் 11 இலட்சம் அரச ஊழியர்களுக்கு மாதந்தோறும் எளிய முறையில் 20 கிலோ அரிசி வழங்கும் திட்டமானது விவசாயிகளின் நலனுக்காக அன்றி, கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பாரிய நெல் ஆலை உரிமையாளர்களின் நலன்களுக்காக இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறது என்று ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

நாட்டின் 11 இலட்சம் அரச ஊழியர்களுக்கு மாதந்தோறும் எளிய முறையில் 20 கிலோ அரிசி வீதம் ஓராண்டு காலத்துக்கு வழங்குமாறு அமைச்சர் முன்வைத்த கோரிக்கைக்கு  சில தரப்பினர் உடன்பட்டுள்ளனர். 

இந்த திட்டமானது விவசாயிகளின் நலனுக்காக அன்றி கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பாரிய நெல் ஆலை உரிமையாளர்களின் நலன்களுக்காக இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறது.

இன்றும் நாட்டின் அரிசி சந்தையை தீர்மானிப்பது அரசாங்கம் அல்ல. மாறாக பெரும் ஆலை அதிபரான டட்லி சிறிசேனவின் சூத்திரமே சந்தையை ஆக்கிரமிக்கிறது. 

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கீரி சம்பா அரிசியை நியாயமான விலைக்கு வழங்க முடியும். இருப்பினும், கிலோ ஒன்றின் விலை 360 ரூபாய் என்ற அதிக விலையிலேயே சந்தையில் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறுவது உண்மைக்கு புறம்பானது. 

கீரி சம்பாவின் உண்மையான கட்டுப்பாட்டு விலை 260 ரூபாயாக இருக்கும்போது ஆலை உரிமையாளர்களின் இலாபத்துக்காக அதனை 360 ரூபாவுக்கு விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாதாரண நுகர்வோர் மற்றும் சிறு அரிசி ஆலை உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதுடன், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மாத்திரம் பலனடைந்து வருகின்றனர்.

 

அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சிறுசிறு சலுகைகளை எதிர்பார்த்தே தற்போதைய அரசாங்கத்துக்கு வாக்களித்துள்ளனர். இருப்பினும், இன்று மக்களுக்கு கிடைத்துள்ளது சலுகைகள் அல்ல மாறாக அதிக விலையிலான டட்லி சிறிசேனவின் அரிசி மட்டுமே ஆகும். 

தற்போது அரசாங்கத்திடம் ஒரு இலட்சம் மெட்ரிக் டொன் நெல் இருப்பு உள்ள போதிலும் அதனை மக்களுக்கு பயனுள்ள வகையில் விநியோகிக்காமல் விலங்கு உணவு தயாரிப்பாளர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய அரசாங்கம் முற்படுகிறது என்றார்.

Source: https://samugammedia.com/20-kg-rice-scheme-for-government-employees-a-drama-for-factory-owners-anand-paliths-accusation-1782881905

NO COMMENTS

Exit mobile version