Home இலங்கை அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை நம்பி விசாரணை; ஈஸ்டர் தாக்குதலின் உண்மை வெளிவராது! – மொட்டுக் கட்சி...

அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை நம்பி விசாரணை; ஈஸ்டர் தாக்குதலின் உண்மை வெளிவராது! – மொட்டுக் கட்சி சாடல்

0
image

வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் அரசு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது என்றும், அரசியல் நோக்கத்தை இலக்காகக் கொண்டு செயற்படுவதால் இதன் உண்மை வெளிவராது என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ‘மக்கள் குரல்’ அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“அரசின் பலவீனமான நிர்வாகத்தால் நாட்டு மக்கள் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் ஊழல் மோசடிகளைச் சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்படுகின்றனர்.

தற்போது உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் பிரதான பேசுபொருளாகக் காணப்படுகின்றது. அரசியல் பழிவாங்கலை இலக்காகக் கொண்டே தற்போதைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், எங்களுக்கு நீதிமன்றத்தின் மீது முழுமையான நம்பிக்கை உள்ளது. சகல நெருக்கடிகளுக்கும் நீதிமன்றத்தின் ஊடாகவே சட்ட ரீதியான தீர்வு எட்டப்படும்.

வரவிருக்கும் 2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், எங்கள்  தரப்புக்கும் இடையில் கடும் போட்டி நிலவும்.தற்போதைய சூழலில் சகல எதிர்க்கட்சிகளும் பொதுவானதொரு நோக்கத்துடன் இணைந்து செயற்படுவது எங்களுக்குக் கிடைத்துள்ள பாரியதொரு வெற்றியாகும்.” – என்றார்.

Source: https://samugammedia.com/investigation-trusting-azad-maulanas-statement-the-truth-of-the-easter-attack-will-not-come-out—criticism-of-the-hoax-party-1780639052

NO COMMENTS

Exit mobile version