நாட்டில் டெங்கு நோய் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அவற்றின் கொள்ளளவையும் தாண்டி அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 35,000-க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, எதிர்வரும் ஜூன் 8, 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நாடு தழுவிய விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
பதிவாகும் மொத்த டெங்கு நோயாளர்களில் சுமார் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதேவேளை, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தறை, காலி, களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கியுள்ள நீரை அகற்றுதல், நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்தல் மற்றும் சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடித்தல் மூலம் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
