Home இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஓரணியில் திரளுங்கள் – விமல் வீரவன்ச அழைப்பு

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஓரணியில் திரளுங்கள் – விமல் வீரவன்ச அழைப்பு

0
image

அரசாங்கத்தின் அடக்குமுறைகள் மற்றும் தவறான நிர்வாகத்திற்கு எதிராக அனைத்து இன மக்களும் ஓரணியில் திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்துள்ளார்.

பத்திரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில், விமல் வீரவன்ச தலைமையில் இன்று (11) நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் அரசியல் பேரவை உறுப்பினர்களான கலாநிதி சுபுன் அனுருத்த ஜயசிங்க மற்றும் சதுன் பண்டார போதரம ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் விடுத்த வேண்டுகோள் மற்றும் கட்சியின் அரசியல் பேரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள மாபெரும் பேரணியில் தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்கவுள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தனிப்பட்ட அல்லது கட்சி நலன்களை முன்னிலைப்படுத்தாமல், நாட்டினதும் தேசத்தினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தை முன்னிறுத்தியே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்த விமல் வீரவன்ச, விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய புலம்பெயர் அமைப்புகளை திருப்திப்படுத்தும் நோக்கில் நாட்டின் அரசியல் தலைவர்கள் மற்றும் இராணுவ, கடற்படை அதிகாரிகளுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

நிலக்கரி மற்றும் அரிசி இறக்குமதி, எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசாங்கம் தொடர்ச்சியாக முறைகேடுகள் மற்றும் நிர்வாகத் தோல்விகளை எதிர்கொள்வதாகவும், இதனால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் இந்தியாவுடன் பல இரகசிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

நாட்டில் பாதாள உலகக் குழுக்களின் அச்சுறுத்தல், துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து, பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இவ்வாறான சூழ்நிலையில், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதை விட அரசியல்வாதிகளை கண்காணிப்பதிலேயே காவல்துறை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் அதிக கவனம் செலுத்துவதாகவும் அவர் சாடினார்.

மேலும், நீதிமன்றத் தீர்ப்புகள் ஊடாக ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கும் தீர்மானங்கள் மறுபரிசீலனை செய்யப்படுவதன் காரணமாக, அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு அதிகாரம் நடைமுறையில் அர்த்தமற்றதாக மாறிவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, அரசாங்கத்தின் அடக்குமுறைகள் மற்றும் தவறான நிர்வாகத்திற்கு எதிராக அனைத்து இன மக்களும் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஓரணியில் திரண்டு, அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள மாபெரும் பேரணியில் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என விமல் வீரவன்ச மேலும் அழைப்பு விடுத்தார்.

Source: https://samugammedia.com/gather-in-large-numbers-against-the-governments-oppressive-measures–vimal-weerawansas-call-1789119040

NO COMMENTS

Exit mobile version