Home இலங்கை அழுகி புழுக்கள் பெருகும் மீன் கழிவுகள்; துர்நாற்றத்தில் திணறும் கல்வியங்காடு சந்தை

அழுகி புழுக்கள் பெருகும் மீன் கழிவுகள்; துர்நாற்றத்தில் திணறும் கல்வியங்காடு சந்தை

0
image

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கல்வியங்காடு செங்குந்தா சந்தையில் மீன் கழிவுகள் முறையாக அகற்றப்படாமையால், அவை அழுகி புழுக்கள் பெருகுவதுடன் கடும் துர்நாற்றமும் வீசுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் சந்தைக்கு அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வரும் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதுடன், சுகாதார அச்சுறுத்தலுக்கு மத்தியில் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் மாநகர சபையினால் சுமார் 80 இலட்சம் ரூபாவுக்கு வருடாந்த குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள குறித்த சந்தையில், சந்தையின் உட்புற சுத்தம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கழிவகற்றல் பணிகளை குத்தகைதாரரும், பொதுவான வெளிப்புற சுகாதாரம் மற்றும் கழிவகற்றல் நடவடிக்கைகளை மாநகர சபையும் மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இரு தரப்பினரும் தங்களுக்குரிய பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்றாததன் காரணமாகவே சந்தையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, சந்தையில் வெட்டப்படும் மீன்களின் கழிவுகள் உரிய நேரத்தில் அகற்றப்படாமல் வாய்க்கால்களுக்குள் கொட்டப்பட்டு தேங்குவதாகவும், இதனால் அவை அழுகி புழுக்கள் பெருகுவதுடன், சந்தை முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் சந்தையில் இவ்வாறான சுகாதார சீர்கேடுகள் தொடர்வது பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சந்தை குத்தகை மூலம் மாநகர சபைக்கு கணிசமான வருமானம் கிடைக்கும் நிலையில், பொதுமக்களிடம் வரி உள்ளிட்ட கட்டணங்களை அறவிடும் மாநகர சபை, அதற்கேற்ப சுகாதார வசதிகளையும் முறையான கழிவகற்றல் நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு உடனடியாக தலையிட்டு சந்தையில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி, சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Source: https://samugammedia.com/rotting-fish-waste-teeming-with-maggots-kalviyangadu-market-suffocates-in-the-stench-1790243380

NO COMMENTS

Exit mobile version