கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு – ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கின் தீமிதிப்பு உற்சவம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகு விமரிசையாக நடைபெற்றது.
கிழக்கிலங்கைத் தமிழர்களின் தனித்துவமான சைவ சமய வழிபாட்டு முறைகள் மற்றும் பாரம்பரியங்களைப் பிரதிபலிக்கும் இத்திருச்சடங்கு பல நூற்றாண்டுகளாக இடம்பெற்று வருகின்றது.
ஆலயத்தின் கதவு திறத்தலுடன் ஆரம்பமான இவ்வாண்டுக்கான திருச்சடங்கு 11 நாட்கள் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுடன் நடைபெற்றது.
இதன்போது அம்பாளின் முத்துச்சப்புர பவனி, வீரகம்பம் வெட்டுதல், நோற்புக்கட்டுதல், மகா சக்தி யாகம் உள்ளிட்ட பல்வேறு சடங்குகள் இடம்பெற்றன.
தீமிதிப்பு உற்சவ தினமான நேற்று ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, தேவாதிகள் புடைசூழ பக்தர்கள் தீக்குளிக்கு அழைத்துவரப்பட்டனர்.
அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதையடுத்து, பக்தர்களின் “அரோகரா” கோஷங்களுக்கு மத்தியில் தேவாதிகள் புடைசூழ தீமிதிப்பு உற்சவம் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
இவ்வுற்சவத்தில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வருகை தந்த பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
பல நூற்றாண்டு காலமாக தொடரும் இவ்வழிபாட்டு மரபின் முக்கிய நிகழ்வான தீமிதிப்பு உற்சவம், பக்தர்களின் பெரும் பங்கேற்புடன் சிறப்பாக நிறைவடைந்தது.
