யாழ்ப்பாணம் – மயிலிட்டி மக்கள் இராணுவ பிடியிலிருக்கும் தமது காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று 23ஆவது வாரத்தையும் எட்டியுள்ளது.
உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிப்பதாக அரச தரப்பால் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை நடைமுறைரீதியான தீர்வு வழங்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதாக செய்திகள் வரும் நிலையில், எமது பிரச்சினைக்கு நேரடியாகத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே நேரம் காணிகளை விடுவிப்போம் என்று கூறிவிட்டு, மீண்டும் மீண்டும் அடுத்தவர் மீது விரலை நீட்டும் நிலை தொடரக்கூடாது.
சர்வ அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில், எமது காணி விடுவிப்பு தொடர்பில் குறிப்பாக இராணுவத்தின் நடவடிக்கைககுக்கு பொறுப்பானவர் என்ற வகையில் நேரடியாக நடவடிக்கை எடுத்து தீர்வை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
