Home இலங்கை இரு சிறுவர்களின் உயிரைப் பறித்த குண்டுத் தாக்குதல் – மேலும் இருவர் போதைப்பொருளுடன் கைது

இரு சிறுவர்களின் உயிரைப் பறித்த குண்டுத் தாக்குதல் – மேலும் இருவர் போதைப்பொருளுடன் கைது

0
image

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், குற்றத்திற்கு உதவி புரிந்ததாகக் கூறப்படும் மேலும் இரு சந்தேகநபர்கள் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற இந்த கொடூரத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை பலத்த காயமடைந்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் தீவிர விசாரணைகளின் தொடர்ச்சியாகவே தற்போது மேலும் இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த தாக்குதலை நேரடியாக மேற்கொண்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் மற்றும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் மேலும் இருவர் கடந்த 17ஆம் திகதி ரிதீமாலியத்த, தெஹிவளை மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தெஹிவளை பொலிஸ் பிரிவில் வைத்து நேற்றைய தினம் மேலதிக இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 11 கிராம் 960 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இருவரும் 30 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் பிலியந்தலை மற்றும் கஹதுடுவை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/bomb-attack-that-killed-two-children–two-more-arrested-with-drugs-1790398696

NO COMMENTS

Exit mobile version