Home இலங்கை இலங்கையில் எரிபொருள் விலை மீளாய்வு; அடுத்த இரு வாரங்களில் தீர்மானம்

இலங்கையில் எரிபொருள் விலை மீளாய்வு; அடுத்த இரு வாரங்களில் தீர்மானம்

0
image

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு, காப்புறுதி மற்றும் போக்குவரத்து செலவுகள் உயர்வு காரணமாக, இலங்கையில் எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

எரிபொருள் இறக்குமதிக்காக தற்போது செலவிடப்படும் தொகை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னர், அரசாங்கத்திடம் புதிய மானியம் கோருவதா அல்லது எரிபொருள் விலையைத் திருத்துவதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான முழுமையான மீளாய்வு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முன்னெடுக்கப்படவுள்ளது.

முன்னதாக அரசாங்கத்தால் வழங்கப்பட்டு பின்னர் இடைநிறுத்தப்பட்ட 15 பில்லியன் ரூபா மானியத்தை மீண்டும் பெற்றுக்கொள்வது அல்லது ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் எரிபொருள் விலையை திருத்துவது தொடர்பில் இதன்போது பரிசீலிக்கப்படவுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் எரிபொருள் விலை திருத்தப்பட்டு ஜூலை மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த மாதம் எவ்வித விலை மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேற்கு ஆசியப் போர் ஆரம்பமான பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை தற்போது 48 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருண தெரிவித்துள்ளார்.

இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில், சர்வதேச சந்தை விலை உயர்வுடன் காப்புறுதி மற்றும் போக்குவரத்துக் கட்டணங்களின் அதிகரிப்பும் பாரிய சவாலாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Source: https://samugammedia.com/fuel-price-review-in-sri-lanka-decision-in-the-next-two-weeks-1786944478

NO COMMENTS

Exit mobile version