இலங்கை பாராளுமன்றத்தின் டிஜிட்டல் கட்டமைப்புக்கு சைபர் தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக, 2025ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற வருடாந்த செயற்திறன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றத்தினால், பரிசீலனைக்குட்படுத்தப்பட்ட ஆண்டில் பாராளுமன்றத்தின் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பில் மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது பரிசீலிக்கப்பட்ட 56 விடயங்களில் 46 விடயங்களுக்கான அபாயம் உயர் மட்டத்தில் காணப்படுவதாக மதிப்பீட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சைபர் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி பாராளுமன்றத்தின் டிஜிட்டல் அமைப்புகளுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து உணர்திறன் மிக்க தகவல்களைத் திருடுதல், நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துதல், இணையதளங்களின் உள்ளடக்கங்களை மாற்றியமைத்தல் உள்ளிட்ட தீங்கிழைக்கும் நடவடிக்கைகள் இடம்பெறக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இவ்வாறான சைபர் தாக்குதல்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, பாராளுமன்றத்தின் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பில் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியம் கணக்காய்வின்போது அவதானிக்கப்பட்டுள்ளதாக 2025ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற செயற்திறன் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
