Home இலங்கை இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளனர் ஐ.நா. ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளனர் ஐ.நா. ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல்

0
image

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகிய துறைகளின் கீழ் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர் என்று தினன தகுன அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

நாட்டில் வறுமை விகிதம் 25 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதுடன், மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் உணவு மற்றும் மருந்துகள் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகக் கடன் பெறவோ அல்லது பொருள்களை அடகு வைக்கவோ தள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டின் வறுமை குறைந்துள்ளது என்றும், திறைசேரி நிரம்பி வழிகின்றது என்றும்  அரசு தொடர்ந்து கூறி வந்தாலும், மேற்சொன்ன அறிக்கைகள் இலங்கையின் உண்மையான கள யதார்த்தத்தையே வெளிப்படுத்தியுள்ளன.

உத்தியோகபூர்வ நுண்பொருளாதார அறிவிப்புகளுக்கும் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான வாழ்க்கைத்தர வீழ்ச்சிக்கும் இடையே கவலைக்குரிய இடைவெளி உள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளின் அடிப்படையில், கொள்வனவுத் திறன் சமநிலை முறைப்படி தயாரிக்கப்பட்ட புதிய உலகளாவிய குறைந்தபட்ச ஊதியச் சுட்டெண்ணில், உலகின் 130 நாடுகளில் இலங்கை 120ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன்படி இலங்கையின் உண்மையான கொள்வனவு திறனின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் மாதத்துக்கு 200 டொலர்களாக மட்டுமே பதிவாகியுள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில் உண்மையான உழைப்பு கொள்வனவு திறனில் இலங்கை மிகக் குறைந்த மட்டத்துக்கே வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, குறைந்தபட்ச ஊதியமானது பாகிஸ்தானில் 570 டொலர்களாகவும், நேபாளத்தில் 490 டொலர்களாகவும், பங்களாதேஷில் 379 டொலர்களாகவும், இந்தியாவில் 233 டொலர்களாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை விரிவுபடுத்துதல், மறைமுக வரிகளை உயர்த்தல் மற்றும் பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலமே அரசு உபரி வருவாயை எட்டியுள்ளது. நிதிக்கட்டுப்பாடுகள் அவசியமானது என்றாலும், வீடுகளின் உண்மையான வருமானத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கி எட்டப்படும் இலக்குகளை உண்மையான பொருளாதார வெற்றியாகக் கருத முடியாது என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

பொருளாதார ஆரோக்கியம் என்பது வெறும் நிதி இலக்குகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டிராமல், உண்மையான ஊதிய வளர்ச்சி, வறுமை ஒழிப்பு மற்றும் மக்களின் கொள்வனவுத் திறன் இயல்பு நிலைக்குத் திரும்புவதை உறுதி செய்வதிலேயே தங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Source: https://samugammedia.com/557-of-sri-lankas-population-faces-multifaceted-threats-shocking-findings-in-un-report-1787988323

NO COMMENTS

Exit mobile version