Home இலங்கை இளம் வயது திருமணங்கள், முறையற்ற தொடர்புகள் – சாய்ந்தமருதில் விழிப்புணர்வுக் கூட்டம்

இளம் வயது திருமணங்கள், முறையற்ற தொடர்புகள் – சாய்ந்தமருதில் விழிப்புணர்வுக் கூட்டம்

0
image

இளம் வயது திருமணங்கள் மற்றும் முறையற்ற ஆண்-பெண் தொடர்புகள் தொடர்பில் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விசேட விழிப்புணர்வுக் கூட்டமொன்று சாய்ந்தமருது மாளிகைக்காடு பகுதியில் நடைபெற்றுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சாய்ந்தமருது மாளிகைக்காடு கிளையின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை (01) மாலை, கிளையின் காரியாலயத்தில் இக்கூட்டம் இடம்பெற்றது.

கிளையின் கௌரவ தலைவர் அஷ்ஷேய்க் M.M. மீரா ஸாஹிப் சலீம் (ஷர்க்கி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, கிளையின் செயலாளர் அஷ்ஷேய்க் நப்றாஸ் ஹனீபா (ரஹ்மானி)  நெறிப்படுத்தலில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, இளம் வயது திருமணங்களால் ஏற்படக்கூடிய சமூக மற்றும் குடும்ப ரீதியான சவால்கள், முறையற்ற தொடர்புகளைத் தவிர்ப்பதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சாய்ந்தமருது மாளிகைக்காடு கிளையின் ஊடகப் பிரிவு நன்றிகளைத் தெரிவித்துள்ளது.

சமூகப் பாதுகாப்பு மற்றும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வை கருத்திற்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, காரைதீவு பிரதேச செயலாளர் சார்பான பிரதிநிதிகள், கிராம உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது காழி நீதிபதி, விவாகப் பதிவாளர்கள், கலாச்சார உத்தியோகத்தர் மற்றும் இணக்க சபை தவிசாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் மற்றும் பொருளாளர், மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர், நிகாஹ் நடத்தி வைக்கும் இமாம்கள் மற்றும் ஜம்இய்யாவின்  உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

Source: https://samugammedia.com/child-marriages-improper-relationships—awareness-meeting-in-saiyanmarudhu-1785669390

NO COMMENTS

Exit mobile version