Home இலங்கை எல்நினோவால் மாறும் இலங்கையின் மழை நிலை – நீர் நெருக்கடி ஏற்படும் அபாயம்

எல்நினோவால் மாறும் இலங்கையின் மழை நிலை – நீர் நெருக்கடி ஏற்படும் அபாயம்

0
image

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் எல்நினோவின் தாக்கம் வலுவடைந்து வருவதால், எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இலங்கைக்கு கிடைக்கக்கூடிய மழைவீழ்ச்சியில் மாற்றம் ஏற்படக்கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை பேராசிரியரும் கலைப் பீடாதிபதியுமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக அதிகரித்து +0.64 என்ற அளவில் காணப்பட்ட இந்து சமுத்திர இருமுனை (Indian Ocean Dipole – IOD) பெறுமானம், இவ்வாரம் திடீரென +0.18 ஆகக் குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திடீர் வீழ்ச்சி எதிர்பாராத ஒன்றாகும் எனவும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் எல்நினோவின் தாக்கம் வலுவாக இருப்பதற்கான அறிகுறியாக இது இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திர இருமுனையின் நேர்மறை பெறுமானம் வலுவாக காணப்படும் சந்தர்ப்பங்களிலேயே ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் போதுமான மழைவீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், எல்நினோவின் தாக்கத்தால் இந்து சமுத்திர இருமுனை மேலும் வலுக்குறைந்தால், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் எதிர்பார்த்ததைவிட மிகக் குறைந்த மழையே கிடைக்கக்கூடும் எனவும் எச்சரித்துள்ளார்.

குறிப்பாக தென்மேற்கு இலங்கையில் பருவக்காற்று காலத்தில் போதிய மழை கிடைக்காத பகுதிகளில் இது பாரிய நீர் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், செப்டெம்பர் மாதத்தின் நடுப்பகுதி வரை இந்து சமுத்திர இருமுனையின் பெறுமானப் போக்கை உன்னிப்பாக அவதானித்த பின்னரே ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கிடைக்கக்கூடிய மழைவீழ்ச்சி தொடர்பில் உறுதியான முடிவுக்கு வர முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்து சமுத்திர இருமுனை செப்டெம்பர் நடுப்பகுதியில் வலுவற்ற நேர்மறை அல்லது எதிர்மறை பெறுமானத்தில் காணப்பட்டால், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மிகக் குறைந்த மழைவீழ்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது முன்னர் வெளியிடப்பட்ட மழை தொடர்பான எதிர்வுகூறல்களுக்கு முற்றிலும் மாறான நிலைமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாண்டின் இரண்டாவது இடைப்பருவ மழையும் வடகீழ் பருவமழையும் இந்து சமுத்திர இருமுனையின் செப்டெம்பர் மாத நடுப்பகுதி நிலவரத்திலேயே பெருமளவு தங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இரு பருவமழைகளும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நீர்வளம் மற்றும் வாழ்வாதாரத்திற்கு மிகவும் முக்கியமானவை எனவும், அப்பகுதிகளின் பெரும்பாலான நீர்த் தேவைகள் இந்த மழைப்பொழிவுகளின் மூலமே பூர்த்தி செய்யப்படுகின்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது காணப்படும் தரைக்கீழ் மற்றும் தரைமேற்பரப்பு நீர் வளத்தை உறுதியானதாகக் கருதி, நீரை வீண்விரயம் செய்யாமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் நாகமுத்து பிரதீபராஜா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Source: https://samugammedia.com/sri-lankas-rainfall-pattern-changes-due-to-el-nio—risk-of-water-shortage-1787114711

NO COMMENTS

Exit mobile version