Home இலங்கை ஓகஸ்ட் நடுப்பகுதி வரை அபாயம் – வவுனியாவிலும் 67 பேருக்கு டெங்கு உறுதி

ஓகஸ்ட் நடுப்பகுதி வரை அபாயம் – வவுனியாவிலும் 67 பேருக்கு டெங்கு உறுதி

0
image

வவுனியா மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், நகரைச் சூழவுள்ள பகுதிகளில் நோய் பரவல் மிக வேகமாக தீவிரமடைந்து வருவதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

மாவட்டத்தின் தற்போதைய நிலவரப்படி, இதுவரை 67 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அதிகாரிகளின் தரவுகளின்படி, வவுனியா நகரத்தை ஒட்டியுள்ள கிராமங்கள் மற்றும் சனநெருக்கடி மிக்க குடியிருப்புப் பகுதிகளிலேயே டெங்கு நோய் வேகமாகப் பரவி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

தற்போதைய காலநிலை மாற்றம் மற்றும் சுற்றாடல் தூய்மையீனம் காரணமாக டெங்குப் பெருக்கம் அதிகரித்துள்ளதாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் தத்தமது வீடுகள், வியாபார நிலையங்கள் மற்றும் பொது இடங்களைச் சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதாரத் துறையினர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நீர்தேங்கி நிற்கக்கூடிய பாத்திரங்கள், டயர்கள் மற்றும் சிரட்டைகளை அகற்றி, டெங்கு உறைவிடங்களை அழிப்பதற்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மாவட்ட சுகாதாரப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

டெங்கு அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், சுயமருத்துவம் செய்யாது உடனடியாக அருகிலுள்ள அரச மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது நிலவும் வானிலை மாற்றத்துடன், எதிர்வரும் ஓகஸ்ட் மாத நடுப்பகுதி வரை டெங்கு நோய் பரவுவதற்கான அதிக அபாயகரமான சூழ்நிலை நிலவக்கூடும் என சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

எனவே, நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத் துறையினர் முன்னெடுக்கும் ஒழிப்புத் திட்டங்களுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறும், தாங்கள் வசிக்கும் வீடுகள், பாடசாலைகள் மற்றும் பணியிடங்களைச் சுற்றியுள்ள வளாகங்களை நுளம்புகள் பெருகாதவாறு சுத்தமாக வைத்திருப்பதை உறுதிசெய்யுமாறும் சுகாதார அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். 

தற்போது கம்பஹா மாவட்டத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, நாடு பூராகவும் நிலவும் டெங்கு அபாயத்தைக் கருத்திற்கொண்டு, 11 மாவட்டங்களை இலக்கு வைத்து இன்று (16) முதல் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இன்று முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டங்களை மையப்படுத்தி இந்த விசேட ஒழிப்புத் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார். 

 

Source: https://samugammedia.com/risk-until-mid-august—dengue-confirmed-in-67-people-in-vavuniya-too-1784181831

NO COMMENTS

Exit mobile version