Home இலங்கை கல்வியை தனியார்மயமாக்காதே! 40,000 பட்டதாரிகளுக்கு நியமனம் எப்போது? கொழும்பில் பாரிய போராட்டம்

கல்வியை தனியார்மயமாக்காதே! 40,000 பட்டதாரிகளுக்கு நியமனம் எப்போது? கொழும்பில் பாரிய போராட்டம்

0
image

கல்வித் துறையில் நிலவும் பல்வேறு நெருக்கடிகளுக்கு தீர்வு கோரியும், இலவசக் கல்வியைப் பாதுகாக்க வலியுறுத்தியும் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் இன்று (04) கொழும்பு பத்தரமுல்லை இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அரசாங்கத்தின் தற்போதைய கல்விக் கொள்கைகள் மற்றும் கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார்.

கல்விச் சீர்திருத்தங்கள், பரீட்சை முறை மாற்றங்கள் மற்றும் புதிய கல்வித் திட்டங்கள் தொடர்பில் கல்வி அமைச்சரும் அதிகாரிகளும் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வந்தாலும், அவை நடைமுறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், அரசாங்கம் படிப்படியாக இலவசக் கல்வியை சீரழித்து, கல்வித் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், அரச பல்கலைக்கழகங்களில் கல்வித் துறையில் பட்டம் பெற்ற 40,000-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள், ஆசிரியர் நியமனம் இன்றி இருப்பதாகவும் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

இப்போராட்டத்தின் போது, ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பாடத்திட்டத் தொகுதிகள் (Modules) மற்றும் பதவி உயர்வு தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறிப்பாக, மொடியூல் முறையினால் பாதிக்கப்பட்டு அவற்றை முழுமையாக நிறைவு செய்ய முடியாத ஆசிரியர்களுக்கு எந்தவித நிபந்தனைகளுமின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும், அவர்களின் சேவையை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், பகுதியளவில் மொடியூல்களை நிறைவு செய்த ஆசிரியர்களை எஞ்சிய தடைகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும், 2025.06.30 ஆம் திகதி வரை நிபந்தனையுடன் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு முந்தைய தரநிலைத் தடைகளில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு கல்வி அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், எதிர்வரும் நாட்களில் போராட்டங்கள் மேலும் தீவிரமடையும் என அதன் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர்.

Source: https://samugammedia.com/dont-privatize-education-when-will-40000-graduates-be-appointed-huge-protest-in-colombo-1785837186

NO COMMENTS

Exit mobile version