Home இலங்கை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு பூரண ஆதரவு – செல்வம் எம்.பி. அறிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு பூரண ஆதரவு – செல்வம் எம்.பி. அறிவிப்பு

0
image

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்  மாநாட்டிற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழீழ விடுதலை இயக்கமும் பூரண ஆதரவை வழங்குவதோடு, அவர்களுடன் தோளோடு தோள் நிற்கின்ற ஒரு செயல்பாட்டை  முன்னெடுக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

இராணுவத்திடம் கண் முன்னே ஒப்படைக்கப்பட்ட கணவன்,குழந்தைகள்,உறவுகள் , காணாமல் போயுள்ள நிலையில் காணாமல் போயிருக்கும் உறவுகளைத் தேடி கொண்டிருக்கின்ற காணாமல் போன உறவுகளின் தாய்மார்கள்  எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில்  மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறார்கள்.

உண்மையில் இந்த உறவுகளின் போராட்டங்கள் அவர்களுடைய தேடுதலுக்கான நடவடிக்கைகள் தான் இன்றைக்கும் எங்களுடைய தேசத்திலே உலக நாடுகளில் பேசும் பொருளாக  இருந்து கொண்டிருக்கிறது.

அது ஒன்று தான் எங்களுடைய தேசத்தின் மீது இன்றைக்கு உலக நாடுகள் தங்களுடைய பார்வையை திருப்புகின்ற ஒரு செயல்பாடாக இருக்கிறது.

 செம்மணி மனித புதைகுழி, எங்களுடைய இனத்தினுடைய படுகொலைகள்,   உயிரோடு புதைக்க பட்டவர்களைத் தோண்டு கின்ற ஒரு மாபெரும் இனத்தினுடைய இந்தப் படுகொலையை நினைவூட்டு கின்ற செயல்பாடாக இன்றைக்கு இருந்து கொண்டிருக்கின்ற சூழலிலே, காணாமல் போன, தேடுகின்ற உறவுகளுடைய அந்த உடல்களும் அங்கே இருக்கலாம் என்ற ஒரு சந்தேகத்தோடு இன்றைக்கு எல்லோரும் இருந்து கொண்டிருக்கின்றோம்.

அதைவிட பொதுமக்கள், ஏனைய இடங்களில் கைது செய்யப்பட்டவர்கள் அங்கே புதைக்கப்பட்டிருப்பார்களா? தமிழினத்தை அழிக்க, ஒழிக்க நினைக்கிற இந்த சக்திகள் எந்த அளவுக்கு படுபாதகமான ஒரு செயல்பாட்டை எங்கள் மீது செய்திருக்கிறது என்பதை இன்றைக்கு வெளிப்படையாக தெரிவிக்கிற ஒரு உடைமை என்னவென்றால், அது செம்மணி புதைகுழி என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

அதன் அடிப்படையில் காணாமல் போன எங்களுடைய தாய்மார்கள் எதிர்வரும் 30 ஆம் தேதி  ஏற்பாடு செய்துள்ள  அவர்களுடைய மாநாட்டிற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழீழ விடுதலை இயக்கமும் பூரண ஆதரவை நல்குகிறது.

பூரண ஆதரவுடன் அவர்களோடு தோளோடு தோள் நிற்கின்ற ஒரு செயல்பாட்டை நாங்கள் நிச்சயமாக செய்ய இருக்கிறோம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/full-support-for-the-conference-on-missing-relatives—mp-selvam-announcement-1787049858

NO COMMENTS

Exit mobile version