உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் காரணமாக, எதிர்காலத்தில் நாட்டில் பல அனர்த்தங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.
அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் (COPE) முன்னிலையான போது அந்த குழுவின் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளி போன்ற அனர்த்தங்களின் போது, எதிர்கொள்வதற்குத் தேவையான பணியாளர் திறன் தமது நிறுவனத்திடம் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
24 மணிநேரம் இயங்கும் அவசர கால நடவடிக்கைப் பிரிவின் அதிகாரிகளுக்கு இரவு நேரப் பணிக்கான தங்குமிட வசதிகள் கூட இல்லை என்று கூறிய அவர், மாவட்ட ரீதியான அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவுகள் மாலை 4.30 மணிக்கு மூடப்படுவதால், இரவு நேரங்களில் அனர்த்தங்கள் ஏற்படும் போது தொலைதூரத்திலுள்ள அதிகாரிகளை அழைத்துச் செல்வதற்கு அதிக நேரம் எடுப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
பணியாளர் பற்றாக்குறையைப் போக்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தையும் (DMC) தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தையும் (NDRSC) இணைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ள போதிலும், அந்தச் செயல்முறைக்கு நீண்ட காலம் எடுக்கும் என்பதால், இடையில் ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால் கடுமையான நெருக்கடி ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
உலகில் உள்ள மற்ற நாடுகள் தொழில்நுட்பத்தையும் வளங்களையும் பயன்படுத்தி அனர்த்த முகாமைத்துவத்தை வலுப்படுத்தி வரும் வேளையில், இலங்கையில் இந்தச் செயல்முறை மிகவும் மெதுவாகவே முன்னேறி வருவதாகக் கூறிய அவர், நாடு எதிர்கொள்ளும் மிகக் கடுமையான ஆபத்துகளில் ஒன்றையும் வெளிப்படுத்தினார்.
மேலும், அந்தமான் தீவுப் பகுதியில் சுனாமி ஏற்பட்டால் 40 நிமிடங்களில் அலைகள் இலங்கையை வந்தடையும் என்றும், அந்த குறுகிய காலத்திற்குள் 3.8 மில்லியன் கரையோர மக்களை வெளியேற்றுவது மிகவும் கடினமான காரியம் என்றும் அவர் கூறினார்.
தற்போது நாட்டில் உள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் செயல்படாத நிலையில், அவற்றைச் சரிசெய்ய முன்மொழியப்பட்டுள்ளதாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட மேலும் தெரிவித்தார்
