Home இலங்கை கிண்ணியாவில் பாடசாலை முன் ஆபத்தான நிலை – வடிகானால் தினமும் சிரமப்படும் மக்கள்!

கிண்ணியாவில் பாடசாலை முன் ஆபத்தான நிலை – வடிகானால் தினமும் சிரமப்படும் மக்கள்!

0
image

கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட T.B. ஜாயா மகா வித்தியாலயத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் அமைந்துள்ள பிரதான வடிகான், வருடக்கணக்காக இடிந்து நொறுங்கிய நிலையில் காணப்படுவதால், பாடசாலை மாணவிகளும் வாகன சாரதிகளும் நாளாந்தம் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இவ்விடயம் குறித்து இப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர்கள் கவலை தெரிவிப்பதுடன், தங்களது பிள்ளைகளின் பாதுகாப்பு முற்றாக கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாக அச்சத்துடனும் ஆத்திரத்துடனும் தெரிவிக்கின்றனர்.

இப்பாடசாலையின் பிரதான வீதியை ஒட்டி அமைந்துள்ள இந்த வடிகான், கடந்த பல வருடங்களாக எவ்வித புனரமைப்பும் செய்யப்படாமல் முற்றாக சேதமடைந்துள்ளது. இதனால் பாடசாலை ஆரம்பமாகும் காலை வேளையிலும், நிறைவடையும் மதிய வேளையிலும் மாணவிகள் பாடசாலைக்குள் உள்நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் பெரும் சவாலை எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக, மாணவிகளை ஏற்றி வரும் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்களை பாடசாலைக்கு முன்னால் பாதுகாப்பான முறையில் திருப்பி எடுப்பதற்கு (U-Turn) போதிய இடவசதி இல்லாதுள்ளது.

சேதமடைந்த வடிகானுக்குள் வாகனங்களின் சக்கரங்கள் சிக்குண்டு விபத்துக்கள் ஏற்படும் அபாயம் நாளாந்தம் நிலவி வருகின்றது.

“இந்த அவல நிலை நேற்றோ இன்றோ ஏற்பட்டதல்ல, பல வருடங்களாக இந்த ஆபத்து நீடித்து வருகின்றது. பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை எவ்வித நிரந்தர தீர்வும் காணப்படவில்லை. அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்ட பின்னர்தான் அதிகாரிகள் விழித்துக் கொள்ளப் போகிறார்களா?” என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 

Source: https://samugammedia.com/dangerous-situation-in-kinniya-in-front-of-the-school–people-struggle-every-day-because-of-the-drain-1782646176

NO COMMENTS

Exit mobile version