Home இலங்கை கிண்ணியாவில் பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவுப் பிரச்சினைகளுக்கு தீர்வு: நடமாடும் சேவையால் 500க்கும் மேற்பட்டோர் பயன்!

கிண்ணியாவில் பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவுப் பிரச்சினைகளுக்கு தீர்வு: நடமாடும் சேவையால் 500க்கும் மேற்பட்டோர் பயன்!

0
image

கிளீன் ஸ்ரீலங்கா (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ், கிண்ணியா பிரதேசத்தில் நிலவி வந்த பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்கும் விசேட நடமாடும் சேவை ஒன்று இன்று (08) கிண்ணியா பிரதேச செயலகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

பல்வேறு அசாதாரண சூழ்நிலைகள் மற்றும் காரணங்களினால் இதுவரை காலமும் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணங்களைப் பதிவு செய்ய முடியாமல், அதற்கான ஆவணங்கள் இன்றி பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வந்த பொதுமக்களுக்கு இந்த நடமாடும் சேவை பெரும் பக்கபலமாக அமைந்திருந்ததாகப் பயனாளிகள் மகிழ்ச்சி வெளியிட்டனர்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நடமாடும் சேவையானது, கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி நெறிப்படுத்தலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு வலய பிரதி பதிவாளர் நாயகம் கே. நடராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட உதவி பதிவாளர் நாயகம், மாவட்ட செயலக பதிவாளர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கிண்ணியா பிரதேச செயலக பதிவாளர் பிரிவு ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கினர்.

இன்று காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த விசேட நடமாடும் சேவையின் மூலம், கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பயனாளர்கள் நேரடியாகத் தமக்கான தீர்வுகளையும் ஆவணங்களையும் பெற்றுப் பயனடைந்துள்ளதாக கிழக்கு வலய பிரதி பதிவாளர் நாயகம் கே. நடராஜா தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/solution-to-birth-death-and-marriage-registration-issues-in-kinniya-more-than-500-people-benefit-from-mobile-service-1783505597

NO COMMENTS

Exit mobile version