தேசிய உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு கிண்ணியா நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான விவாதப் போட்டியின் இறுதிப் போட்டி புதன்கிழமை (23) கிண்ணியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம். மஹ்தி தலைமையில் நடைபெற்ற இவ்விவாதப் போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரி, கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம், கிண்ணியா அல் ஹிரா மகளிர் மகா வித்தியாலயம் மற்றும் ரீ.பி. ஜாயா மகளிர் மகா வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகள் பங்கேற்றன.
முதலாம் சுற்றில் கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தை எதிர்கொண்ட கிண்ணியா அல் ஹிரா மகளிர் மகா வித்தியாலயம் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
மற்றைய போட்டியில் ரீ.பி. ஜாயா மகளிர் மகா வித்தியாலயத்தை எதிர்கொண்ட கிண்ணியா மத்திய கல்லூரி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இதனையடுத்து புதன்கிழமை(23) நடைபெற்ற இறுதிப் போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரி 260 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுக் கொண்டதுடன், கிண்ணியா அல் ஹிரா மகளிர் மகா வித்தியாலயம் 247 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
மாணவர்களின் அறிவாற்றல், வாதத்திறன், கருத்துக்களை முன்வைக்கும் ஆற்றல் மற்றும் சமூக விடயங்கள் தொடர்பான புரிதலை வெளிப்படுத்தும் வகையில் இவ்விவாதப் போட்டி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
