கிளிநொச்சி – முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துன்னாவில் பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மட்டுவில்நாடு மேற்கு, பூநகரி பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய கனகரத்தினம் கந்தசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாடுகளை பராமரிக்கும் நோக்கில் காவலுக்காக நேற்று (24) மதியம் துன்னாவில் பகுதிக்கு சென்ற குறித்த நபர், இன்று (25) வரை வீடு திரும்பாத நிலையில், அவரது உறவினர்கள் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, குறித்த பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஜெயபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யானை தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
