Home இலங்கை கிளிநொச்சியில் 3 கிராமங்களை உள்ளடக்கி அனர்த்த ஒத்திகை

கிளிநொச்சியில் 3 கிராமங்களை உள்ளடக்கி அனர்த்த ஒத்திகை

0
image

பாரிய அனர்த்தம் ஒன்று ஏற்பட்டால் பொதுமக்கள், அரச திணைக்களங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் எவ்வாறு ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என்பதை விளக்கும் வகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் அனர்த்த ஒத்திகை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதி இந்த அனர்த்த ஒத்திகை நடைபெறவுள்ளது.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம், தட்டுவன்கொட்டி மற்றும் பரந்தன் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக குறித்த ஒத்திகை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் பரந்தன் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் A.M.R.N.K. அலஹகூன், கிளீன் ஸ்ரீலங்கா மாவட்ட இணைப்பாளர் மருங்கன் மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும், வலயக் கல்விப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர், இலங்கை மின்சார சபை பொறியியலாளர், நீர்ப்பாசன பொறியியலாளர், இராணுவத்தினர், சுகாதாரத்துறையினர், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், கிராம சேவையாளர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

பாரிய அனர்த்தம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் துரிதமாகவும் ஒருங்கிணைந்த முறையிலும் செயற்படுவதற்கான தயார்நிலையை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஒத்திகை முன்னெடுக்கப்படவுள்ளது.

Source: https://samugammedia.com/disaster-drill-covering-three-villages-in-kilinochchi-1790601967

NO COMMENTS

Exit mobile version