கொழும்பு – மஸ்கெலியா இரவு அரசுப் பேருந்து சேவையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதிப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் ஜூலை 9 ம் திகதி முதல் அவிசாவளை_டிப்போவுக்கு சொந்தமான, கொழும்பிலிருந்து ஹட்டன் வழியாக மஸ்கெலியாவிற்கு தினமும் இரவு 11.00 மணிக்கு இயக்கப்பட வேண்டிய அரசுப் பேருந்து சேவையில் கடந்த (8) ம் திகதி ஏற்பட்ட குளறுபடியால் பயணிகள் பல மணி நேரம் கடும் அசௌகரியத்திற்கு உள்ளாகியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பயணிகளின் தெரிவிப்பின்படி, முன்கூட்டியே கட்டணம் செலுத்தி பயணச்சீட்டுகளை பெற்றிருந்த போதிலும், குறித்த நேரத்தில் பேருந்து கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திற்கு வரவில்லை. பயணிகள் முறையிட்டதைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேர தாமதத்திற்குப் பிறகு மாற்றுப் பேருந்து ஒன்று இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும், அந்தப் பேருந்து மஸ்கெலியா வரை செல்லாமல் ஹட்டன் வரை மட்டுமே சேவையாற்றியதாகவும், அதிகாலை சுமார் 3.00 மணியளவில் ஹட்டனில் பயணிகளை இறக்கிவிட்டு திரும்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அதிகாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை மஸ்கெலியா உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் போக்குவரத்து வசதியின்றி பெரும் சிரமத்துக்கு உள்ளானதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நீண்ட காலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த இரவு பேருந்து சேவையை பலரது முயற்சியால் மீண்டும் ஆரம்பித்திருந்த போதிலும், அதனை உரிய திட்டமிடலுடனும் பொறுப்புடனும் நடைமுறைப்படுத்த அவிஸ்சாவலை அரச பேருந்து நிலைய அதிகாரிகள் தவறியுள்ளதாகவும் பயணிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக இரவு நேர வேலைகளுக்குச் செல்வோர், அவசர தேவைகளுக்காக பயணிப்போர் மற்றும் தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த சேவையை அதிகம் நம்பியிருப்பதால், இத்தகைய குறைபாடுகள் அவர்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, கொழும்பு–ஹட்டன்–மஸ்கெலியா இரவு அரசுப் பேருந்து சேவையை இடையூறின்றி, நேரத்திற்கு ஏற்றவாறு மற்றும் நிலையான முறையில் இயக்குவதற்கு சம்பந்தப்பட்ட அவிஸ்சாவலை அரச பேருந்து நிலைய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
