Home இலங்கை சட்டவிரோதமாகத் தங்கிப் பணிபுரிந்த வெளிநாட்டவர்கள்: கொழும்பு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

சட்டவிரோதமாகத் தங்கிப் பணிபுரிந்த வெளிநாட்டவர்கள்: கொழும்பு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

0
image

சுற்றுலா வீசாவில் இலங்கை வந்து, வீசா விதிமுறைகளை மீறிச் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து இணையவழி வர்த்தகத்தில் (Online Business) ஈடுபட்டு வந்த 94 சீனப் பிரஜைகளுக்குக் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் 70 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை அபராதமாக விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளின் வழிகாட்டலில் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, இராஜகிரிய பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வழக்கு விசாரணையின் போது மன்றில் ஆஜரான பொலிஸ் பரிசோதகர் ராஜித்த வர்ணப்பிரிய, “சுற்றுலா வீசாவில் வந்து இவ்வாறு முறைகேடாகப் பணிபுரிவது உள்ளூர் உழைக்கும் வர்க்கத்தினருக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, ஏனைய வெளிநாட்டவர்களுக்கும் எச்சரிக்கையாக அமையும் வகையில் இவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.

நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட 94 சீனப் பிரஜைகளும் தாம் வீசா விதிமுறைகளை மீறிப் பணியாற்றியதை ஒப்புக்கொண்டனர். இருதரப்புச் சாட்சியங்களையும் பரிசீலித்த நீதிவான், குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒவ்வொருவருக்கும் தலா 75,000 ரூபா வீதம், மொத்தம் 70 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை அபராதமாகச் செலுத்துமாறு உத்தரவிட்டார்.

Source: https://samugammedia.com/foreigners-staying-and-working-illegally-colombo-court-delivers-a-stern-verdict-1786283868

NO COMMENTS

Exit mobile version