Home இலங்கை சுகாதார அதிகாரிகளை வாகனத்தால் மோத முயன்ற புலம்பெயர் தமிழர்? சந்நிதி ஆலயத்தில் பரபரப்பு

சுகாதார அதிகாரிகளை வாகனத்தால் மோத முயன்ற புலம்பெயர் தமிழர்? சந்நிதி ஆலயத்தில் பரபரப்பு

0
image

யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றதாக புலம்பெயர் தமிழர் ஒருவர் மீது வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்நிதி ஆலயத்தின் தீர்த்த உற்சவம் நேற்று இடம்பெற்ற நிலையில், பக்தர்களுக்காக பல்வேறு தாகசாந்தி நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அவற்றில் ஒரு தாகசாந்தி நிலையத்தில் சுகாதாரத் தரம் உறுதி செய்யப்படாத நீரில் தயாரிக்கப்பட்ட ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தி குளிர்பானங்கள் தயாரிக்கப்பட்டதாக பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள், குறித்த ஐஸ் கட்டிகளை குளிர்பானங்கள் தயாரிக்க பயன்படுத்த தடை விதித்ததுடன், சுமார் 20 பரல் ஐஸ் கட்டிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஐஸ் கட்டிகளை உழவு இயந்திரத்தில் ஏற்றிச் சென்று அழிப்பதற்காக உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்தபோது, தாகசாந்தி நிலையத்தை நடத்தி வந்தவருடன் தொடர்புடைய ஒருவர் மற்றொரு வாகனத்தில் வந்து, உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதும் வகையில் அச்சுறுத்தி அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து குறித்த நபருக்கு எதிராக பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களால் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Source: https://samugammedia.com/migrant-tamil-tried-to-hit-health-officials-with-a-vehicle-uproar-at-sannidhi-temple-1787999146

NO COMMENTS

Exit mobile version