அரசமைப்புக்கான 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்த போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி தனது முன்னைய நிலைப்பாட்டிலேயே உறுதியாக நிற்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (22) உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
22ஆவது திருத்தமானது ஜனநாயகத்துக்கு விரோதமானதும், அரசியல் மரணதண்டனையை நிறைவேற்றுபவரின் திருத்தமாகவும் காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் விமர்சித்தார்.
இந்தத் திருத்தமானது நீதிமன்றத்தின் சுயாதீனம், நீதியைப் பெற்றுக் கொடுக்கும் செயல்முறை மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதும் பெரும் மரண அடியைக் கொடுப்பதாக அமைந்து காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுருக்கமாகக் கூறுவதானால், இதனையொரு “அரசியல் அலுகோசு திருத்தம்” என்றும், ஜனநாயகத்தை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் சூழ்ச்சி என்றும் குறிப்பிட்ட அவர், இந்தத் திருத்தத்தை முற்றாக நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.
“வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற கொள்கைப் பிரகடனத்தில் ஜனாதிபதி பதவியை ஒழிப்பதாகக் கூறிய தற்போதைய அரசு, நீதிமன்றத்துக்கு மரண அடியை ஏற்படுத்தும் வேலைகளையே செய்து வருகின்றது என்றும் அவர் சாடினார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எப்போதுமே சரியான மற்றும் வெளிப்படையான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கொடூரமான தாக்குதலின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரிகள் மற்றும் திட்டங்களை வகுத்தவர்களை வெளிக்கொணர வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இதற்காகப் பக்கச்சார்பற்ற, வெளிப்படையான மற்றும் சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கிய விசாரணை நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
குற்றவாளிகளுக்குப் பெற்றுக்கொடுக்கக் கூடிய அதிகபட்ச தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதில் தமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.
நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள 21 இலட்சம் மக்களையும் அரசு கைவிட்டுவிட்டது என்று குற்றம் சாட்டிய சஜித் பிரேமதாஸ, ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலையைப் பெற்றுத் தருவதாகக் கூறிய போதிலும் இன்று அது வழங்கப்படவில்லை என்றார்.
விவசாய அமைச்சரின் கூற்றுப்படி ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்ய 137 ரூபா செலவாகும் நிலையில், தற்போது 120 ரூபாவே வழங்கப்படுகின்றது என்றும், இதன் மூலம் அரசு திட்டமிட்டே ஒரு கிலோ நெல்லுக்கு 17 ரூபா நட்டத்தை ஏற்படுத்தி வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் 35 ஆயிரம் பட்டதாரிகளுக்கு உடனடியாக வேலை தருவதாகக் கூறி வாக்குகளைப் பெற்ற அரசு, தற்போது தேர்தலின் பின்னர் பட்டதாரிகளை முழுமையாக மறந்துவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின்படி, இடைநிலைக் கல்விக்குப் பிந்தைய கல்வி கற்ற 15 – 24 வயதுக்குட்பட்டவர்களில் இலங்கையில்தான் அதிகளவான வேலையின்மை விகிதம் காணப்படுகின்றது என்று சுட்டிக்காட்டிய அவர், சர்வதேச நாணய நிதியத்தின் இந்தத் தரவுகளை அறிந்திருந்தும் அரசுக்கு அது பற்றித் தெரியாமல் இருப்பது ஒரு பாரிய பேரழிவு என்றார்.
