நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் அறிக்கையின்படி, கடந்த மே மாதத்தில் நாட்டின் மொத்த கையிருப்பு 6,881 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் அது 6,450 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது. இது மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 431 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வீழ்ச்சியாகும்.
அந்நியச் செலாவணி மற்றும் தங்கக் கையிருப்பு குறைந்தமையே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, கடந்த மே மாதத்தில் 6,661 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த அந்நியச் செலாவணிக் கையிருப்பு, ஜூன் மாதத்தில் 407 மில்லியன் டொலர்கள் குறைந்து 6,254 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
மேலும், தங்கக் கையிருப்பிலும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை குறிப்பிடுகிறது.
மே மாதத்தில் 216 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த தங்கக் கையிருப்பு, ஜூன் மாதத்தில் 191 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது
அதன்படி, மே மாதத்துடன் ஒப்பிடுகையில் நாட்டின் தங்க இருப்பில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
