Home இலங்கை டுபாயில் மறைத்து வைத்த போதைப்பொருள்… இலங்கையில் இருந்து Location அனுப்பிய இளைஞன் கைது

டுபாயில் மறைத்து வைத்த போதைப்பொருள்… இலங்கையில் இருந்து Location அனுப்பிய இளைஞன் கைது

0
image

இலங்கையில் இருந்து டுபாயில் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை, அங்குள்ள இளைஞர்களுக்கு தொலைபேசி ஊடாக இடங்களைத் தெரிவித்து விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 26 வயது இளைஞர் ஒருவர் கம்பளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பளை – மரியாவத்தை பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் சுமார் நான்கு ஆண்டுகள் தொழில் புரிந்திருந்த குறித்த இளைஞர், அங்கு பணியாற்றிய காலப்பகுதியில் ‘கான் பாபு’ என அழைக்கப்படும் பாகிஸ்தானியர் ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன் பின்னர் இலங்கைக்கு திரும்பிய அவர், டுபாயில் தொழில் புரியும் இலங்கை இளைஞர்களுடன் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு, டுபாயின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடங்களை (Location) அவர்களுக்கு அனுப்பி, போதைப்பொருள் விற்பனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கம்பளை – மரியாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து வெளியேறிய சந்தர்ப்பத்தில், கம்பளை பிரிவின் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் தாரக குமாரசிங்க தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 20 கிராம் 40 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 4 கிராம் 80 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இலங்கையில் இருந்துகொண்டு டுபாயில் இடம்பெறும் போதைப்பொருள் விற்பனை நடவடிக்கையுடன் குறித்த நபருக்கு தொடர்பு இருப்பது தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், டுபாயில் ‘மீகமுவே லொகு அய்யா’ என அழைக்கப்படும் மற்றுமொரு நபரின் ஊடாக இலங்கைக்கு போதைப்பொருட்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றை இலங்கையிலும் விநியோகித்து வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, டுபாயில் உள்ள தொடர்புகள் மூலம் போதைப்பொருட்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றை கம்பளை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையிலும் சந்தேகநபர் ஈடுபட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் இருந்துகொண்டு டுபாயில் போதைப்பொருள் விற்பனை வலையமைப்பை இயக்கியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் கம்பளை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Source: https://samugammedia.com/young-man-arrested-for-sending-the-location-from-sri-lanka-of-drugs-hidden-in-dubai-1790577867

NO COMMENTS

Exit mobile version