தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நீராகாரம் இன்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (15) ஆரம்பமாகியுள்ளன.
அந்தவகையில், முல்லைத்தீவு – தேராவில் துயிலுமில்ல வளாகத்தில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பமாக தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணிக்குழு உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
தியாக தீபம் திலீபன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், அவசரகாலச் சட்டத்தை நீக்குதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குதல், தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகப் பகுதிகளில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துதல் மற்றும் தமிழ் கிராமங்களில் புதிய பொலிஸ் நிலையங்களை அமைப்பதை நிறுத்துதல் உள்ளிட்ட ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.
அவரது நினைவை முன்னிறுத்தி, தமிழர் தாயகப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
…..
இந்நிலையில் தியாக தீபம் திலீபனுக்கு நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் வெண்கல உருவ சிலை வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தியாக தீபத்தின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
அதன்போது, நினைவிடத்தில் தியாக தீபத்தின் வெண்கல உருவ சிலை வைக்கப்பட்டு , உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேவேளை, தியாக தீபம் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நல்லூர் வடக்கு வீதியிலும் சம நேரத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
………..
இதேவேளை தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதலாவது நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று (15) கிளிநொச்சியில் இடம்பெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் பிரதேச சபைத் தவிசாளர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
…
மேலும் தியாகதீபம் திலீபனின் 39வது நினைவு தினம் போராளிகள் நலன்புரிச்சங்கம் மற்றும், தமிழ்த்தேசிய செயற்ப்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் வவுனியா பொங்கு தமிழ் தூபியில் இன்று அனுஸ்டிக்கபட்டது.
இதன்போது தியாக தீபம் திலீபனின் நினைவு படத்திற்கு மலர்மாலை அணிவித்து, ஈகைசுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்தப்பட்டது.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன், பிரதேசசபை தவிசாளர் பா.பாலேந்திரன் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், முன்னாள் போராளிகள் கலந்துகொண்டனர்.
……..
இதேவேளை தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தலின் ஆரம்ப நாளான இன்று (15), யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வில் உணர்வுபூர்வமான அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
யாழ் மாநகரசபை முதல்வர் வி. மதிவதனி தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முதல்வர் முதலாவது சுடரை ஏற்றி வைத்து, தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து பிரதி முதல்வர் மற்றும் மாநகரசபை உறுப்பினர்களும் மலரஞ்சலி செலுத்தினர்.
இதன்போது நினைவேந்தல் அஞ்சலி உரையாற்றிய முதல்வர், அஹிம்சையை உலகுக்கு உணர்த்திய காந்திய வழியில், ஒரு துளி நீரையேனும் அருந்தாது 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிரை ஈகம் செய்த லெப்டினன்ட் கேணல் திலீபனின் தியாகத்தை நெஞ்சில் நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், தமிழ் மக்களின் விடுதலைக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் சுவடுகளை என்றும் நெஞ்சில் சுமக்க உறுதி பூணுவதே பசியுடன் உயிர்நீத்த தியாக தீபம் திலீபனுக்கு நாம் செலுத்தும் உணர்வுபூர்வமான அஞ்சலியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முதல் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
