Home இலங்கை திருகோணமலையில் சட்டவிரோத கட்டடங்கள் அகற்றம் – நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிரடி

திருகோணமலையில் சட்டவிரோத கட்டடங்கள் அகற்றம் – நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிரடி

0
image

திருகோணமலை உட்துறைமுக வீதியில் மீன்பிடி படகுத்துறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கட்டடங்கள் இன்று (20) அகற்றப்பட்டுள்ளன.

கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் சட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, குறித்த கட்டுமானங்கள் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 28.20 அடி நீளம் மற்றும் 09.10 அடி அகலம் கொண்ட கட்டடம், 44.7 அடி நீளம் மற்றும் 09.10 அடி அகலம் கொண்ட கழிப்பறை மற்றும் 17.5 அடி அகலம் கொண்ட மற்றுமொரு கட்டடம் ஆகியவற்றை அகற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

1981ஆம் ஆண்டின் 57ஆம் இலக்க கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 31 (2) இன் கீழ், 1988ஆம் ஆண்டின் 64ஆம் இலக்க மற்றும் 2011ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க சட்டத் திருத்தங்களின் அடிப்படையில், குறித்த கட்டடங்களை அகற்றுவதற்கான உடைத்தல் கட்டளை கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் வழங்கப்பட்டது.

இதற்கமைய, திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தினால் கையொப்பமிடப்பட்ட உடைத்தல் கட்டளை கடந்த 14.07.2025 அன்று குறித்த இடத்தில் ஒட்டப்பட்டிருந்தது.

எனினும், குறித்த உத்தரவுக்கு எதிராக சம்பந்தப்பட்ட தரப்பினரால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கு நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து உடைத்தல் உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான குறித்த பகுதியில், சில மீனவர்கள் மீன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்னர் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, சுற்றுலா பணியகத்தின் ஊடாக தனியாருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், உரிய அரச நிறுவனங்களின் அனுமதியின்றி அப்பகுதியில் உணவகம் ஒன்று இயங்கி வந்ததாகவும், அங்கிருந்த கழிப்பறை கழிவுகள் நேரடியாக கடலில் கலக்கும் அபாயம் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், குறித்த கட்டடங்கள் கடற்காட்சியை மறைக்கும் வகையில் அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை உட்துறைமுகப் பகுதியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கும் ஏற்ற வகையில் அபிவிருத்தி செய்ய அரச நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: https://samugammedia.com/demolition-of-illegal-buildings-in-tirunelveli–action-taken-following-court-order-1784541812

NO COMMENTS

Exit mobile version