திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரும் குழுவின் இணைத் தலைவருமான பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர ஆகியோரின் தலைமையில் இன்று (16)நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், அரச அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினர்.
இக்கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் முன்மொழிவுகளின் சுருக்கம் வருமாறு:
இந்தக் கூட்டத்தில், முறையான ஆவணங்களின்றி நீண்டகாலமாக காணியில் வசித்து வரும் மக்களுக்கு விரைவாக உரிமைப்பத்திரங்களை வழங்குவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
முத்து நகர் கிராம மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன், கிண்ணியா சூரங்கல் இராணுவ முகாம் அமைந்துள்ள காணி விவகாரம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
கந்தளாய், ஜெயந்திபுர பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் விவசாய நிலங்கள் வழங்கப்பட்ட 58 விவசாயிகளுக்கு, வட்டி மற்றும் வரிகளை உடனடியாகச் செலுத்துமாறு விதிக்கப்பட்டுள்ள உத்தரவினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தப்பட்டது.
வீதி அபிவிருத்தி அதிகார சபை, வனவிலங்கு மற்றும் கடற்கரை பாதுகாப்பு திணைக்களங்களுக்குச் சொந்தமான அரச ஒதுக்கீட்டு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது குறித்துக் கடுமையான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு அபாயத்தைக் கட்டுப்படுத்த விசேட கவனம் செலுத்தப்பட்டது.
தம்பலகாமம் மற்றும் கிண்ணியா வைத்தியசாலைகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான புகார்கள் குறித்து மாகாண சுகாதார பணிப்பாளர் ஊடாக விசாரிக்க தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் கிண்ணியா தள வைத்தியசாலையை அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரவும், அனர்த்த பாதிப்புக்குள்ளாகும் ஈச்சிலம்பற்று வைத்தியசாலையை பூநகர் பகுதிக்கு மாற்றவும் ஆலோசிக்கப்பட்டது.
கன்னியாவில் உள்ள குப்பை கொட்டும் இடத்தை ஒரு மாதத்திற்குள் நிறுத்தி, புதிய இடம் கிடைக்கும் வரை பாலம்போட்டாறு சிங்ஹகந்த பகுதியை தற்காலிகமாகப் பயன்படுத்த திருகோணமலை நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அறிவுறுத்தப்பட்டது.
மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாலங்களின் தரம் குறித்து ஒருங்கிணைந்த அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது. மேலும், சாபி நகர், கடற்கரைச்சேனை, தாஹா நகர், தக்வா நகர், கட்டைபறிச்சான் மற்றும் வெருகல் புன்னையடி ஆகிய பகுதிகளில் புதிய பாலங்களை அமைக்கவும், பழுதடைந்துள்ள பாலங்களைப் புனரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாய வளர்ச்சியை நோக்காகக் கொண்டு கைவிடப்பட்ட 205 சிறு குளங்களையும் 25 அணைக்கட்டுகளையும் வரும் நிதியாண்டில் மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அத்துடன் மாவிலாறு அணைக்கட்டு புனரமைப்புப் பணிகளை விரைவுபடுத்தவும், நீலாப்பொளை வீதியை புனரமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
தற்போதைய படகுச் சேவைகளில் பயணிகளுக்கு உயிர் காக்கும் அங்கிகளை (Life Jackets) கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யானை-மனித மோதல்களுக்கு நேரடியாக முகம் கொடுக்கும் பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளின் பாதுகாப்பு குறித்து ஆராயப்பட்டது.
மொரவெவ நாமல்வத்த கிராமத்திலிருந்து அதிகாலையிலேயே பஸ் மூலம் பாடசாலைக்கு வரும் மாணவர்கள், யானை அச்சுறுத்தல் காரணமாகப் பாடசாலை ஆரம்பிக்கும் வரை காத்திருக்க வேண்டியுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் மற்றும் போக்குவரத்து அதிகார சபையினர் இணைந்து நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டது.
வெருகல் பிரதேசத்தை யானைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க மேலும் 12 கி.மீ நீளத்திற்கு யானை வேலி அமைக்க வனஜீவராசிகள் திணைக்களத்தின் கவனம் ஈர்க்கப்பட்டது.
கந்தளாய் குளம் சார்ந்த அழகுபடுத்தல் திட்டத்திற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. உப்புவெளி கடற்கரை பூங்காவிற்குள் இருக்கும் வீதியைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கவும், புதிய சுற்றுலாத் தலங்களை அடையாளம் காணவும் முடிவு செய்யப்பட்டது.
சீனக்குடா விமானப்படை தளம் மற்றும் மார்பிள் பீச் (Marble Beach) பகுதிகளில் மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுகளை நீக்குவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
கிளிவெட்டி, பாரதிபுரம் உள்ளிட்ட பல கிராமங்களின் மக்கள் வங்கிச் சேவைகளுக்காக நீண்ட தூரம் பயணிப்பதைத் தவிர்க்க, கிளிவெட்டி பிரதேச மருத்துவமனை வளாகத்தில் இலங்கை வங்கி அல்லது மக்கள் வங்கி ATM/CDM இயந்திரங்களை நிறுவக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
2026 வரவுசெலவுத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் வசதிகள் மற்றும் வேலைவாய்ப்புகளுக்காக 1500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தும், அதற்கான உரிய விண்ணப்பங்கள் இன்னும் சமர்ப்பிக்கப்படாததால், தகுதியானவர்களை இனங்கண்டு விரைந்து அறிக்கை அனுப்புமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் தெளிவுபடுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட திட்ட முன்மொழிவுகள் மற்றும் பிரஜா சக்தி திட்டங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், மாவட்டத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தியையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனத் தலைவர்களினால் வலியுறுத்தப்பட்டது.
Source: https://samugammedia.com/trincomalee-district-coordinating-committee-meeting-1784198947
