Home இலங்கை தெவிநுவர பெரஹராவுக்கு பலத்த பாதுகாப்பு – காவடி ஊர்வலத்திற்கு பொலிஸார் அனுமதி

தெவிநுவர பெரஹராவுக்கு பலத்த பாதுகாப்பு – காவடி ஊர்வலத்திற்கு பொலிஸார் அனுமதி

0
image

தெவிநுவர வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் ஒரு பகுதியாக இன்று (28) நடைபெறவுள்ள காவடி நடன ஊர்வலத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு மேலதிகமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

காவடி நடனம் தொடர்பாக இரு பாதாள உலகக் குழுக்களுக்கிடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் மோதல் நிலைமையைத் தொடர்ந்து, இம்முறை காவடி நடனத்தை நிறுத்துமாறு பொலிஸ் மா அதிபர் அண்மையில் பரிந்துரைத்திருந்தார்.

எனினும், இதுதொடர்பில் இறுதி முடிவை எடுப்பதற்காக நேற்று (27) மாலை மாத்தறை மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, கடந்த ஆண்டுகளில் காவடி நடனத்தில் பங்கேற்ற அனைத்து குழுக்களுக்கும் இம்முறையும் பங்கேற்க அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, பொலிஸாரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இன்று தெவிநுவர உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த பெரஹரா காவடி நடனத்துடன் வீதியுலா நடைபெறவுள்ளது.

இதனிடையே, தெவிநுவர பெரஹராவின் பாதுகாப்பு தொடர்பாக எழுந்துள்ள விவகாரம் குறித்து அரசியல் தரப்புகளிலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய அரசாங்கத்திடம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் முறையான வேலைத்திட்டம் எதுவும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தெவிநுவர தேவாலயத்தில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி, ஏதேனும் புலனாய்வுத் தகவல் கிடைக்கும்போது அதனை முறையாகப் பகுப்பாய்வு செய்து முடிவெடுக்கத் தவறுவது எதிர்காலத்தில் பிரச்சினையாக மாறக்கூடும் என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கலாச்சார விழாக்களை கட்டுப்படுத்துவதற்கு குற்றக் கும்பல்களின் உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கக் கூடாது என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவகவும் தெரிவித்துள்ளார்.

Source: https://samugammedia.com/heavy-security-for-the-thevinuvara-perahera–police-permission-for-kavadi-procession-1785212012

NO COMMENTS

Exit mobile version