Home இலங்கை நல்ல தலைவர்களை உருவாக்கும் பொறுப்பு பாடசாலைகளுக்கே – செந்தில்மாறன்

நல்ல தலைவர்களை உருவாக்கும் பொறுப்பு பாடசாலைகளுக்கே – செந்தில்மாறன்

0
image

எங்கட புத்தகங்கள் ஏற்பாட்டில் கோண்டாவில் சந்திக்கருகில் அமைந்துள்ள இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் மூத்தோர் ஒன்றுகூடல் நிகழ்வு 14.06.2026 காலை 10 மணிக்கு ஆரம்பமானது. 

அறிவால், அனுபவத்தால், ஆற்றல்களால் உயர்ந்த மூத்தோர்களை இணைத்து இடம்பெற்ற மேற்படி ஒன்றுகூடலில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் அதிபர் ரட்ணம் செந்தில்மாறன் பங்கேற்று தெரிவித்த கருத்துகள் வருமாறு, 

எங்களுடைய காலத்தை விட இப்போது இருக்கின்ற பாடசாலை மாணவர்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்கள். இதனை ஏன் சொல்கிறேன் என்றால் நாங்கள் வாழ்ந்த போர்க்காலங்களில் திசைமாறிப் போவதற்கான வாய்ப்புகள் இல்லாது வாழ்ந்த வாழ்க்கைக்கும் தற்போது அவர்கள் திசைமாறிப் போவதற்கான வாய்ப்புகள் அதிகமிருந்தும் திசைமாறிப் போகாமல் இருக்கின்ற செயற்பாட்டால் தான் அவ்வாறு சொல்கிறேன். எங்களுடைய காலத்தை விட இப்போதைய மாணவர் சமுதாயம் மிகச் சிறப்பானவர்கள். நல்லவர்கள். எங்களிடம் அன்று திறன்பேசிகள் இருக்கவில்லை. தொலைக்காட்சி பார்க்க மின்சாரம் இருக்கவில்லை. போதைப்பொருள் இருக்கவில்லை. இவ்வளவும் இல்லாமல் வாழ்ந்த எங்களுடைய வாழ்க்கைக்கும் இப்போது இருக்கின்ற மாணவர்களின் வாழ்க்கைக்கும் வித்தியாசம். அன்றைய காலங்களை போல் இன்றைக்கு மாணவர்களை அடித்து தண்டிப்பதில்லை. 

இப்போது இருக்கிற மாணவர் சமூகம் வெளியே வந்து வேலை உலகத்துக்கு போகும் போது அவர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். ஏனெனில் இவர்களுக்கு தலைமை அதிகாரிகளாக இருப்பவர்கள் 70 – 80 களில் பிறந்தவர்கள். நீண்ட தலைமுறை இடைவெளியும், வாழ்ந்த, வளர்ந்த சூழல்களும் பாரிய வேறுபாடு உண்டு. நான் வேலைக்கு போகும் போது எனக்கும் எனது தலைமை அதிகாரிக்கும் இடையிலான வயது வேறுபாடு குறைவாக இருந்தது. கிட்டத் தட் ட ஓரே முறைமைக்குள் வாழ்ந்தவர்கள். அதனால் அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் பெரிதாக வித்தியாசம் இல்லை. ஆனால் இன்று மாணவர்களை சமூகத்துக்குள் ஒன்றிணைத்து வெற்றிகரமான பிரஜையாக கொண்டுவருவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். 

எங்களுடைய வாழ்க்கையில் நாம் எத்தனையோ இடப்பெயர்வுகளை சந்தித்தோம். சமூகத்தோடு இணைந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். அதற்கான வாய்ப்புகளும் எல்லோருக்கும் இருந்தது. பாடசாலைக் காலங்களில் விளையாட்டுக்களில் ஈடுபடாதவரும் தன்னை ஏதோவொரு வகையில் சமூகத்தோடு இணைத்து புடம் போட்டிருப்பார். இப்போது அதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டு வருகிறது. ஒரு மாணவன் பாடசாலையை விட்டு வெளியே வந்ததும் தனியார் கல்வி நிலையம். இப்போது தேடிக் கற்பதற்கான வாய்ப்புகள் அதிகம். 

எங்களுக்கு ஒரு பாடத்தை பாடசாலையில் கற்க தவறி விட்டால் அதனைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் பாடசாலையில் குறைவு. இப்போது ஒரு மாணவன் சுயகற்றலில் ஈடுபட ஏராளமான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் இப்போது மாணவர்கள் பாடசாலை தவிர்ந்த மீதி நேரங்களை அதிகம் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்ல செலவழிப்பதால் மென் திறன் அபிவிருத்தி குறைந்து கொண்டு வருகிறது. இந்நிலைமையை மாற்ற வேண்டும். எங்கள் பிள்ளைகள் ஏன் வழிமாறிப் போகிறார்கள் என்றால், 

எல்லா மாணவர்களுக்கும் தன்னை சமூகத்துக்கு முன்னால் வெளிப்படுத்த வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். நடனம், சங்கீதம், நாடகம், விளையாட்டு என்று ஏதோவொரு வகையில் தன்னை வெளிப்படுத்தவேண்டும் என்ற விருப்பம் எல்லா மாணவர்களுக்கும் இருக்கும். அந்த வாய்ப்புகளை வழங்கும் போது திசைமாறிப் போவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும். 

மலசலகூடம் உள்ளிட்ட ஒரு பாடசாலை முழுவதும் மாணவர்களால் துப்பரவாக்கப்பட்டு சனி, ஞாயிறு வந்து பாடசாலையின் அயல் வெளிவீதிகளிலும் கூட்டுகின்ற நிலை எங்கள் பாடசாலையில் இருக்கிறது. அந்த நடத்தை மாற்றம் பெருமளவுக்கு மாறிக் கொண்டிருக்கிறது. இதற்கு நாங்கள் பாடசாலையின் கழகங்கள், மன்றங்களின் செயற்பாடுகளை அதிகரித்திருந்தோம். 40 ஆக இருந்த கழகங்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்திருக்கிறது. எமது பாடசாலையில் மரபுரிமைக் கழகத்தை உருவாக்கியிருக்கிறோம். அதன் செயற்பாடு எமது மரபுரிமைகளை பாதுகாப்பதும் அதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது. அவர்கள் வரும் புதன், வியாழக்கிழமை நிலம் என்கிற பெயரில் மிகப் பிரமாண்டமான ஒரு மரபுரிமைக் கண்காட்சியை நடாத்த உள்ளார்கள். அவ்வாறாக ஒவ்வொரு கழகங்களுக்கும் குறைந்தது ஒரு வருடாந்த செயற்திட்டமாவது இருக்கும். இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக வினைத்திறனுடையவர்களாக மாணவர்களை வெளியே கொண்டு வருவதற்கு முயற்சிகளை எடுத்து வருகின்றோம். ஏனைய பாடசாலைகளிலும் இவ்வாறான முயற்சிகள் இடம்பெறுகிறது. அதற்கான ஒத்துழைப்புகளையும் நாங்கள் வழங்கி வருகிறோம். 

கற்றலை மாணவர்கள் எங்கேயும் பெற்றுக் கொள்ளலாம். மாணவர்களை வளமான ஒரு தலைமைத்துவப் பாங்குள்ள வினைத்திறனுடையவர்களாக மாற்றக் கூடிய ஒரே ஒரு இடம் பாடசாலை மட்டும் தான். இவற்றை எந்த தனியார் கல்வி நிலையத்தாலும் செய்ய முடியாது. இதனால் தான் பாடசாலைகளுக்கு பாரிய பொறுப்புள்ளது. நாங்கள் 60 – 80 களில் உருவாகி வந்த தலைவர்களை கொண்டாடி விட்டோம். 30 ஆண்டுகள் போர் எங்கள் தலைமைத்துவத்தில் பெரிய இடைவெளியைக் கொண்டு வந்துள்ளது. அந்த இடைவெளியை வேகமாக நாங்கள் நிரப்ப வேண்டும்.

இல்லாவிடில் தென் பகுதியுடன் மிகவும் போட்டித்தன்மையை எதிர்கொள்ள முடியாமல் இருக்கும். தமிழ் சமூகத்தில் நல்ல தலைமைத்துவங்களுக்கான இடைவெளி கூடிக் கொண்டு வருகின்றது. அந்த இடைவெளியை குறைத்து இப்போது இருக்கின்ற இளைய சமுதாயத்தை நல்ல தலைவர்களாக மாற்ற வேண்டிய பாரிய பொறுப்பு எங்களிடம் உள்ளது.

Source: https://samugammedia.com/schools-are-responsible-for-creating-good-leaders–senthilmaran-1781531450

NO COMMENTS

Exit mobile version