பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள ‘எல் நினோ’ காலநிலையின் தாக்கம் தற்போது இலங்கைக்கு அருகே நிலைகொண்டுள்ளது. இதனால் ஜூலை இறுதியில் அல்லது ஓகஸ்ட் தொடக்கத்தில் எல்நினோவின் தாக்கம் தீவிரமடையும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எல் நினோ எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது தொடர்பிலும் அவர் விளக்கியுள்ளார்.
யாழப்பாணத்தில் உள்ள மிலேனியம் ஹோட்டலில் இன்று கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்து எல் நினோ தொடர்பில் விளக்கியுள்ளார்.
இது தொடர்பில் போராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவிக்கையில்,
பொதுவாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மே முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதி வறட்சியான வாநிலை மற்றும் அதிக வெப்பம் நிலவும் காலமாகும்
தற்போது யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகள், முல்லைத்தீவு, துணுக்காய், மாந்தை கிழக்கு, மன்னார் மாந்தை மேற்கு, முசலி, நானாட்டான் மற்றும் வவுனியா வெங்கலச்செட்டிக்குளம் ஆகிய பகுதிகளில் நீர் நெருக்கடி ஒரு புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
எல் நினோவின் வருகை இந்த நிலையை இன்னும் தீவிரமான ஒரு பிரச்சினையாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 60 நாட்களில் இப்பகுதிகளில் 12 மி.மீ அளவிலான மழை வீழ்ச்சி மட்டுமே கிடைத்துள்ளது, ஆனால் அதே காலப்பகுதியில் 288 மி.மீ-க்கு மேற்பட்ட நீர் ஆவியாகியுள்ளது.
எல் நினோவின் உச்சம் காரணமாக ஆவியாக்கம் பல மடங்கு அதிகரித்து, மழையற்ற வரண்ட வாநிலை நிலவும் சூழ்நிலையில், தற்போதுள்ள நீர்நிலைகளே பிரதான நீர் ஆதாரங்களாக இருக்கும்
தற்போதுள்ள நீர் ஆதாரங்களை வீண்விரயம் செய்வதன் மூலமும், தவறான பயன்பாடு மூலமும் இழந்தால் மிகப்பெரிய நீர் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டி வரும்.
எனவே, அரசாங்கமும் மக்களும் இணைந்து நீரை மிகவும் சிக்கனமாகவும் வினைத்திறனுடனும் பயன்படுத்துகின்ற பொறிமுறைகளை அல்லது கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
இவ்வாறான திட்டமிடப்பட்ட செயல்பாடுகளின் ஊடாகவே எதிர்வு கூறப்பட்டுள்ள இந்த வரட்சிக் காலத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். மத்திய பசிபிக் பிராந்தியத்தில் எல் நினோ தோற்றப்பாடுகள் உருவாவது அனைத்து மாதிரி நிலையங்களாலும் 100% உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜூலை 10 ஆம் திகதி நிலவரப்படி, எல் நினோவின் 3.4 பிராந்தியத்தில் வெப்பநிலை 1.4 பாகை செல்சியஸ் அதிகரித்துள்ளது. இது ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் 2 பாகை செல்சியஸாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய பசிபிக் பிராந்தியத்தில் காணப்படும் இந்த வெப்பநிலை அதிகரிப்பு தற்போது இந்தியப் பெருங்கடல் பகுதியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக, ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் இலங்கைக்கு அருகில் எல் நினோ விரிவாக்கம் ஏற்படும்.
மேலும், ஆகஸ்ட் தொடக்கத்தில் இந்தியப் பெருங்கடலின் வெப்பநிலை தற்போதைய நிலையை விட 1.8 பாகை செல்சியஸ் வரை கூடுதலாக அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
எல் நினோவுடன் தொடர்புடைய வெப்ப அலை காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த சுமார் 11,000 பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. மேலும், ஸ்பெயினில் எதிர்பாராத காட்டுத்தீயும் உருவாகியுள்ளது.
இலங்கையில் நீர் ஆதாரங்கள் மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகும் என எதிர்கூறப்பட்டுள்ளதால், நீரைப் பாதுகாப்பதற்கான முறைகளை அரசாங்கம் உடனடியாகவும் வினைத்திறனாகவும் மேற்கொள்ள வேண்டும்.
ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கடுமையான வறட்சி நிலவ வாய்ப்புள்ளது, அதே சமயம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க திணைக்களங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, முறையான விழிப்புணர்வு மற்றும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இலங்கை மக்கள் இந்த எல் நினோ நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்று பேராசிரியர் பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
