Home இலங்கை நாட்டை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் – அமைச்சரவை வழங்கிய ஒப்புதல்

நாட்டை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் – அமைச்சரவை வழங்கிய ஒப்புதல்

0
image

உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாட்டை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் முன்மொழியப்பட்ட ‘நாட்டை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்ட மூலம்’ அரசாங்கத்தின் வர்த்தமானியில் வெளியிடப்படுவதற்கும், ஒப்புதலுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் (தாற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் உள்ள தற்போதைய சட்டக் கட்டமைப்பிற்குப் பதிலாக, தற்போதுள்ள சட்டத்தில் கண்டறியப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

புதிய சட்டத்திற்கான ஆரம்ப வரைபைத் தயாரிப்பதற்காக சட்டவரைஞர் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. அக்குழு தயாரித்த வரைபின் அடிப்படையில் குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான கொள்கை ரீதியான ஒப்புதலை அமைச்சரவை 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் வழங்கியது. சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட இந்தச் சட்ட மூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது.

இதற்கமைய, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதோடு, பாராளுமன்றத்தில் பரிசீலனை செய்து ஒப்புதல் பெறுவதற்கு முன்னர் குறித்த சட்ட மூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, முன்மொழியப்பட்ட இந்தச் சட்ட மூலம் இனி பாராளுமன்ற நடைமுறைகளின்படி முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/law-to-protect-the-country-from-terrorism—cabinet-approval-given-1787047138

NO COMMENTS

Exit mobile version