தலவாக்கலை – லிந்துலை பிரதான வீதியின் லிந்துலை நகரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் மீது கப் வாகனம் மோதிவிட்டு, நிற்காமல் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (28) அதிகாலை சுமார் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மஹிந்திரா ரக கப் வாகனம், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், சிறிய ரக வேன் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியுள்ளது.
இதன்போது குறித்த நான்கு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
வாகனங்கள் மீது மோதிய பின்னரும் கப் வாகனத்தின் சாரதி அதனை நிறுத்தாமல் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய கப் வாகனம் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்லும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கண்காணிப்பு கமெராக்களில் பதிவாகியுள்ளன.
CCTV காட்சிகளின் அடிப்படையில் தப்பிச் சென்ற கப் வாகனத்தையும் அதன் சாரதியையும் அடையாளம் காணும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
Source: https://samugammedia.com/the-cab-hit-parked-vehicles-and-escaped-1785245410
