நெடுந்தீவில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில், கடல்நீரை நன்னீராக்கும் (RO Plant) திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என ஈ.பி.டி.பி கட்சி அரசாங்கத்திடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம் கருத்து தெரிவிக்கையில்,
நெடுந்தீவில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் அன்றைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் RO Plant திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
தற்போது அந்த திட்டத்தின் மூலம் நாள்தோறும் சுமார் 80,000 லிட்டருக்கும் அதிகமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெறப்பட்டு, சுமார் 900 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஆனால், நெடுந்தீவில் மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில் தற்போது 1400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதால், தற்போதைய நீர் உற்பத்தி போதுமானதாக இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் அரச திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளும் அதிகரித்துள்ளதால், கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை விரிவுபடுத்தி குடிநீர் பிரச்சினையை முழுமையாக தீர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது, கூடுதலாக பல மழைநீர் சேமிப்பு தொட்டிகள் மற்றும் சுமார் 300 குடும்பங்களுக்கு மலசலகூட வசதிகளும் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Source: https://samugammedia.com/urgent-request-to-resolve-neduntheevu-water-problem-1783142873
