“சிறைச்சாலைகளில் போதுமான வசதிகள் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது சொந்த எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு புலம்புவது நியாயமானதே” என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல நாடாளுமன்றத்தில் காரசாரமாகத் தெரிவித்தார்.
அத்துடன், நாட்டில் பாதாள உலகக் குழுக்கள் என்று குறிப்பிடும் போது, ஏதாவது ஒரு வழியில் ராஜபக்ஷக்கள் அவர்களுடன் தொடர்புப்பட்டிருப்பதே உண்மை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று மாலை நடைபெற்ற, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு பிரதி அமைச்சர் மேலும் உரையாற்றியதாவது:-
“தற்போது நாட்டில் போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தலுக்கு எதிராக அரசால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் உறுப்பினர்கள், அரசின் இந்த வேலைத்திட்டங்களை நெருக்கடிக்குள்ளாக்குவதற்குப் பல்வேறு சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். எனினும், அவர்களின் அந்த முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலைத் தடுப்பதற்கு நீதி அமைச்சர் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்துகின்றார். ஆனால், நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு நீதி அமைச்சர் தெளிவான விவரங்களை வழங்கியுள்ளார். இதில் எதனையும் மறைக்க வேண்டிய தேவை தற்போதைய அரசுக்கு இல்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தங்காலை சிறைச்சாலையில் பாரிய கலவரம் ஒன்று ஏற்பட்டது. அப்போது கலவரத்தில் ஈடுபட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘ஜூலம்பிட்டியே அமரே’ என்பவரைப் பார்ப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ நேரடியாகவே சிறைச்சாலைக்குச் சென்றார். அங்கு சென்று, ‘அமரே நான் வந்துவிட்டேன், கலவரத்தை நிறுத்து’ என்று மஹிந்த ராஜபக்ஷ கூறினார். உடனடியாக அந்தப் பாதாள உலகக் குழு உறுப்பினர் கலவரத்தை நிறுத்தினார். இதுதான் இவர்களது பின்னணி.
ஆனால், தற்போதைய நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சிறைச்சாலைக்குச் சென்று, மஹிந்த ராஜபக்ஷவைப் போன்று எவரையும் பெயர் குறிப்பிட்டு எந்தவொரு பாதாள உலகக் குழு உறுப்பினரையும் அழைக்கவில்லை. நாட்டின் தற்போதைய சிறைக் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசால் முறையான மற்றும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.” – என்றார்.
