Home இலங்கை பேருந்து சாரதியின் அலட்சியம்; பாடசாலையில் மகள்களை இறக்கிவிட்டு வீடு திரும்பிய இராணுவ கார்பரல் பலி

பேருந்து சாரதியின் அலட்சியம்; பாடசாலையில் மகள்களை இறக்கிவிட்டு வீடு திரும்பிய இராணுவ கார்பரல் பலி

0
image

குருநாகல் – புத்தளம் வீதியின் பரமாகந்த சந்திக்கருகில் உள்ள தோனிகல, நவ கம்மன பகுதியில்  இன்று  காலை இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளார்.

குறித்த வீதியில் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து சாரதி, வீதியின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பஸ்ஸை கடந்து முன்னோக்கிச் செல்ல முற்பட்டுள்ளார். 

இதன்போது சாரதியின் அலட்சியப் போக்கு காரணமாக, எதிர் திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஆணமடுவை உரியாவைச் சேர்ந்த 38 வயதுடைய துமிந்த சந்தருவன் விக்ரமஆராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் இராணுவத்தில் கார்ப்பரலாக பணியாற்றியதுடன், இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.

திருகோணமலையில் நீண்டகால இராணுவப் பயிற்சியை நிறைவு செய்து கடந்த 19ஆம் திகதி வீட்டிற்கு வந்திருந்த அவர், 20ஆம் திகதி மீண்டும் கடமைக்குச் செல்லத் தயாராகியிருந்த நிலையில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை  தனது இரண்டு மகள்களையும் மோட்டார் சைக்கிளில் பாடசாலையில் இறக்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் தாக்கத்தால் மோட்டார் சைக்கிள் சுமார் 100 மீட்டர் தூரம் பேருந்தினால் இழுத்துச் செல்லப்பட்டதாகவும், மோட்டார் சைக்கிள் முற்றிலும் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த கார்பரலின் ஒரு மகள் இம்முறை 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் ஆணமடுவை பொலிஸ் போக்குவரத்து பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Source: https://samugammedia.com/negligence-of-the-bus-driver-army-corporal-dies-after-dropping-daughters-at-school-and-returning-home-1784540727

NO COMMENTS

Exit mobile version