Home இலங்கை போதைப்பொருட்களின் தெரு மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது? – அதிகாரிகளிடம் ஜனாதிபதி வினவல்!

போதைப்பொருட்களின் தெரு மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது? – அதிகாரிகளிடம் ஜனாதிபதி வினவல்!

0
image

தற்போது 9 சதவீதமாக காணப்படும் மீண்டெழும் செலவீனங்களைக் குறைத்து, 4 சதவீதமாக உள்ள மூலதனச் செலவீனங்களை அதிகரிக்கும் நோக்கில், எதிர்வரும் ஆண்டிற்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

2027ஆம் ஆண்டில் மூலதனச் செலவீனமாக இரண்டு ட்ரில்லியன் ரூபாயை ஒதுக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது தற்போதைய ஒதுக்கீட்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 40 சதவீத அதிகரிப்பாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

காலி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, நிறுவனங்களுக்கு இடையில் முறையான ஒருங்கிணைப்பு இல்லாததன் காரணமாக சில அபிவிருத்தித் திட்டங்கள் தாமதமடைந்துள்ளமை தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறுவர் காப்பகங்கள் மற்றும் தடுப்பு முகாம்களிலிருந்து வெளியேறும் சிறுவர்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தை விரைவுபடுத்தி, அதன் நன்மைகளை அவர்களுக்கு வழங்குவதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருட்களின் சந்தை மதி எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது குறித்து ஜனாதிபதி பொலிஸ் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் “ரதம எகட” போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்துபொலிஸ் அதிகாரிகள், இந்தக் கூட்டத்தில் விளக்கமளித்தனர்.

பல்வேறு பகுதிகளில் நிலவும் போதைப்பொருளின் தற்போதைய சந்தை விலை அடிப்படையிலேயே மதிப்பீடுகள் கணக்கிடப்படுவதாக தெரிவித்தனர்.

உதாரணமாக, காலி பகுதியில் 70 முதல் 80 மில்லிகிராம் கொண்ட ஹெரோயின் பொதி ஒன்று சுமார் 2,000 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், கொழும்பு உட்பட்ட நாட்டின் பிற பகுதிகளில் இதன் விலைகள் மாறுபடுவதாகவும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

காலி மாவட்டத்தில் இந்த வருடத்துக்குள் இதுவரை 2,607 போதைப்பொருள் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் சுமார் 119 கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துகள் மற்றும் வாகனங்கள் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

Source: https://samugammedia.com/how-is-the-street-value-of-drugs-calculated–the-president-asks-officials-1785299985

NO COMMENTS

Exit mobile version