Home இலங்கை -மண்டைதீவு படுகொலையின் 40 ஆம் ஆண்டு நினைவு தினம்: குருநகரில் கண்ணீர் மல்க அஞ்சலி!

-மண்டைதீவு படுகொலையின் 40 ஆம் ஆண்டு நினைவு தினம்: குருநகரில் கண்ணீர் மல்க அஞ்சலி!

0
image

மண்டைதீவு பகுதியில் கடற்படையினரால் 31 மீனவர்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டதன் 40 ஆவது ஆண்டு நினைவு தினம், நேற்று யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

குருநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை நினைவுத் தூபியருகே நடைபெற்ற இந்நிகழ்வில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

குருநகர் ஆலய பங்குத்தந்தையின் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, நினைவுத் தூபிக்கு மெழுகுவர்த்தி மற்றும் தீபங்கள் ஏற்றப்பட்டு, மலர் தூவி உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1986 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் தேதி, குருநகர் பகுதியிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் உட்பட 31 மீனவர்கள் ஒரு படகில் கரைவலை மீன்பிடிப்புக்காக மண்டைதீவுக்குச் சென்றிருந்தனர். இதன்போது அங்கு நிலைநாட்டப்பட்டிருந்த கடற்படையினர், அந்த மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டும், வாளால் வெட்டியும் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்திருந்தனர்.

இக்கொடூரச் சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும், தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பத்தினரும் குருநகர் மக்களும் இணைந்து இந்த அஞ்சலிப் பிராத்தனையை முன்னெடுத்திருந்தனர்.

Source: https://samugammedia.com/-40th-anniversary-of-the-mandaitivu-massacre-tears-and-tribute-in-gurunagar-1781142515

NO COMMENTS

Exit mobile version