மதுபோதையில் ரயில் தண்டவாளத்தில் கால்களை வைத்து உறங்கிக் கொண்டிருந்த 65 வயதுடைய முதியவர் ஒருவர் ரயிலில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று இரவு (26) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து இரவு 7.40 மணியளவில் கொழும்பு நோக்கிப் புறப்பட்ட ரயில் பயணித்துக்கொண்டிருந்தபோது, தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த குறித்த நபர் ரயிலில் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இதன்போது படுகாயமடைந்தவர் 65 வயதுடைய எம். ராஸிக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் தகவல் கிடைத்ததும், 1990 ‘சுவசெரிய’ அவசர ஆம்புலன்ஸ் சேவை மூலம் அவர் உடனடியாக மீட்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
