வலிகாமம் வடக்கு பகுதியில் காணி விடுவிப்பு மற்றும் காணி சுவீகரிப்பு தொடர்பாக மயிலிட்டி மக்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை முன்னிறுத்தி, மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளை அரசாங்கம் சுவீகரிப்பதற்காக அண்மையில் எழுத்துமூல அறிவித்தல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், தங்களது ஆழ்ந்த கவலையை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் வெளிப்படுத்தியுள்ளனர்.
பல தலைமுறைகளாக தாம் வாழ்ந்து வந்த பூர்வீகக் காணிகள் தங்களது வாழ்வாதாரம், அடையாளம் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்துடன் தொடர்புடையவை எனக் குறிப்பிட்ட மக்கள், அவற்றை எந்தவிதத்திலும் இழக்கத் தயாரில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், தமது பூர்வீகக் காணிகளுக்கு மாற்றாக வேறு காணிகளையோ அல்லது நஷ்டஈட்டுத் தொகையையோ வழங்கும் எந்தவொரு திட்டத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை எனவும் அவர்கள் உறுதியாகக் கூறியுள்ளனர்.
காணி சுவீகரிப்புக்கு எதிராக நீண்டகாலமாக ஜனநாயக மற்றும் சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், மீண்டும் காணிகளைப் பறிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுவது பெரும் அநீதியாகும் என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, இவ்விடயம் தொடர்பில் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து, தங்களது காணி உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், மயிலிட்டி மக்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் நீண்டகாலமாகத் தீர்வு காணப்படாத காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலிட்டி வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், பிரதேச சபை உறுப்பினர் செ. விஜயராஜ், வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சபேசன், காணி விடுவிப்பு தொடர்பான அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Source: https://samugammedia.com/mayilitti-kani-approval-people-worry-about-mp-sreedharan-1785148442
