Home இலங்கை மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்த தம்பதி கைது – அம்பாறையில் அதிரடி நடவடிக்கை

மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்த தம்பதி கைது – அம்பாறையில் அதிரடி நடவடிக்கை

0
image

அம்பாறை மாவட்டம் முவங்கல, ஹிங்குரன மற்றும் தமன ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் நீண்டகாலமாக இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் இன்று (15) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குறித்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முவங்கல பகுதியில் உள்ள உக்சிரிபுர பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட முயன்ற சந்தர்ப்பத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் முவங்கல கிராமம் 8 ஆம் பகுதியைச் சேர்ந்த 37 மற்றும் 34 வயதுடைய கணவன், மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ஆண் சந்தேகநபரிடமிருந்து 5,120 மில்லிகிராம் ஹெரோயினும், பெண் சந்தேகநபரிடமிருந்து 2,500 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், போதைப்பொருள் விற்பனை மூலம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் 21,510 ரூபாய் பணமும், போதைப்பொருள் விநியோகத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த தம்பதியினர் நீண்டகாலமாக இப்பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகவும், இது தொடர்பில் கிராம மக்களால் தமன பொலிஸ் நிலையத்தில் பல முறை முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் மனோஜ் அழகியவன்ன தலைமையிலான குழுவினர் பல சந்தர்ப்பங்களில் இவர்களது வீட்டை சோதனை செய்த போதிலும், போதிய ஆதாரங்கள் கிடைக்காததாலும், அவர்கள் தப்பித்துச் சென்றதாலும் கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் அம்பாறை பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவினர் விசேட திட்டமொன்றை முன்னெடுத்து இன்று இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தமன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நாளை (16) அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் உத்தரவின் பேரிலும், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்லவின் அறிவுறுத்தலின் கீழும் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அம்பாறை பிரிவுப் பொறுப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் மேற்பார்வையில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்ன மற்றும் ஊழல் ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தனுஷ்க ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை போதைப்பொருள் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இத்தகைய விசேட சுற்றிவளைப்புகள் தொடரும் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source: https://samugammedia.com/couple-selling-drugs-targeting-students-arrested–major-action-in-ampara-1784119292

NO COMMENTS

Exit mobile version