Home இலங்கை யாழில் சேதமடைந்த வீதியில் 8 விபத்துகள்; நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் – மக்கள் விசனம்

யாழில் சேதமடைந்த வீதியில் 8 விபத்துகள்; நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் – மக்கள் விசனம்

0
image

யாழ்ப்பாணம் – மானிப்பாய், எழுமுள்ளி பகுதியில் சேதமடைந்த நிலையில் காணப்படும் வீதியில் இதுவரை எட்டு விபத்துகள் இடம்பெற்றுள்ள போதிலும், வீதியை சீரமைக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

782 ஆம் வழித்தடத்துக்குட்பட்ட யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதான வீதியின் மானிப்பாய் – எழுமுள்ளி பகுதியில், வீதியின் முழு அகலமும் சுமார் 15 அடி நீளத்திற்கு சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

குறித்த பகுதியில் நிலத்துக்கு கீழ் பொருத்தப்பட்டிருந்த குடிநீர் விநியோகக் குழாய் சேதமடைந்ததைத் தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன்னர் வீதியை உடைத்துக்கொண்டு தண்ணீர் பாய்ந்துள்ளது. பின்னர் குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்ட போதிலும், சேதமடைந்த வீதி இதுவரை திருத்தப்படாமல், காப்பெற் உடைந்த நிலையில் காணப்படுகிறது.

இந்த வீதியூடாக மூன்று வழித்தடங்களில் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வருவதுடன், தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த சேதமடைந்த பகுதியில் இதுவரை எட்டு விபத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உட்பட பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வீதி, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் காணப்படும் நிலையில், தொடர்ந்தும் சீரமைக்கப்படாமல் காணப்படுவது மேலும் விபத்துகள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரித்துள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் விபத்துகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும், அவ்வாறான அசம்பாவிதங்களுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையே பொறுப்புக்கூற வேண்டிய நிலை ஏற்படும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, மேலும் விபத்துகள் அல்லது அசம்பாவிதங்கள் இடம்பெறுவதற்கு முன்னர் குறித்த வீதியை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Source: https://samugammedia.com/8-accidents-on-a-damaged-road-in-jaffna-authorities-not-taking-action–public-frustration-1787116972

NO COMMENTS

Exit mobile version