Home இலங்கை யாழில் ‘நீதிக்கான நீள் பயணம்’ – அனைத்து தரப்பினருக்கும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை

யாழில் ‘நீதிக்கான நீள் பயணம்’ – அனைத்து தரப்பினருக்கும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை

0
image

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள ‘நீதிக்கான நீள் பயணம்’ நிகழ்வுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என சிவில் சமூக செயற்பாட்டாளரும் மனித உரிமைகள் ஆர்வலருமான யே.யாட்சன் பிகிறாடோ கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரில் நேற்று (25) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஆகஸ்ட் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா மண்டபத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் ‘நீதிக்கான நீள் பயணம்’ நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி நீண்டகாலமாக போராடிவரும் தாய்மார்கள், தங்களது நீதிக்கான கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செயற்பாட்டுக்கு சிவில் சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், சர்வதேச அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கி வருவதாகவும், சிவில் சமூகத்தினராக தாங்களும் அவர்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் யே.யாட்சன் பிகிறாடோ கூறினார்.

யுத்தம் நிறைவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், காணாமலாக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடும் தாய்மார்கள், பெற்றோரைத் தேடும் பிள்ளைகள் மற்றும் சகோதரர்களைத் தேடும் உறவுகள் என பலரும் தொடர்ந்தும் வீதி வீதியாக நீதிக்காக போராடி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர்களின் போராட்டம் உண்மை நிலைநாட்டப்பட வேண்டும், நீதி கிடைக்க வேண்டும் மற்றும் சர்வதேச தலையீட்டுடன் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, மனித உரிமைகளை மதிக்கும் அனைவரும், சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த நீதிக்கான பயணத்தில் இணைந்து, எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Source: https://samugammedia.com/long-march-for-justice-in-jaffna–call-for-support-from-all-groups-1787737373

NO COMMENTS

Exit mobile version