‘வனஸ்பதி’ (Vanaspathi) தேசிய திட்டத்தின் கீழ் மேலும் 20 காடுகளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக இன்று (26) பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான நிகழ்வு நுவரெலியா – சந்ததென்ன வனவியல் நிறுவனத்தில் சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்தி தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்படி, நுவரெலியா, கேகாலை, அம்பாறை, பதுளை, வவுனியா மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 20 காடுகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனப்படுத்தப்படவுள்ளன.
இந்தக் காடுகளின் மொத்த பரப்பளவு சுமார் 9,538 ஹெக்டேர் என சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சுற்றாடல் அமைச்சும் வனப்பாதுகாப்புத் திணைக்களமும் இணைந்து இதுவரை 93 காடுகளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், இன்று வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ள 20 வனப்பகுதிகளையும் சேர்த்து, பாதுகாக்கப்பட்ட காடுகளால் சூழப்பட்ட மொத்த நிலப்பரப்பு சுமார் 65,000 ஹெக்டேராக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன வளங்களைப் பாதுகாப்பதுடன், நாட்டின் சுற்றுச்சூழல் சமநிலையை பேணும் நோக்கில் ‘வனஸ்பதி’ தேசிய திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
