Home இலங்கை 11 இலட்சம் நிலுவை வழக்குகளைத் தீர்க்கவே இந்த முடிவு! நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது குறித்து...

11 இலட்சம் நிலுவை வழக்குகளைத் தீர்க்கவே இந்த முடிவு! நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது குறித்து நீதி அமைச்சர் விளக்கம்

0
image

இலங்கையில் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முதல் நீதவான்கள் வரையிலான நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு ஆண்டுகளால் நீடிப்பது தொடர்பில் நிலவும் சர்ச்சைகளுக்கு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விளக்கமளித்துள்ளார்.

நாட்டின் நீதிமன்றங்களில் சுமார் 11 இலட்சம் வழக்குகள் தேங்கியுள்ள நிலையில், அனுபவமிக்க நீதிபதிகளின் சேவையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதன் மூலம் வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சியடைந்த நாடுகளில் 10 இலட்சம் மக்களுக்கு 47 முதல் 60 நீதிபதிகள் வரை உள்ள நிலையில், இலங்கையில் அதே மக்கள் தொகைக்கு சுமார் 20 நீதிபதிகள் மட்டுமே உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1978ஆம் ஆண்டுக்குப் பின்னர் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், சர்வதேச ரீதியில் பல நாடுகளில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 70 ஆக உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிகளின் அனுபவம் அதிகரிக்கும் போது நாட்டின் சட்டக் கட்டமைப்பும் மேலும் வலுப்பெறும் எனக் குறிப்பிட்ட அவர், நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளுக்கு விரைவான தீர்வைப் பெற்றுக்கொடுக்க நீதிபதிகளின் சேவையை நீடிப்பது உதவும் என தெரிவித்துள்ளார்.

எனினும், நீதித்துறையின் செயற்பாட்டை விரைவுபடுத்துவதற்கு ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது மட்டும் போதாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், தேவையான பணியாளர்களை நியமித்தல் மற்றும் அரச பகுப்பாய்வாளர் திணைக்களம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களின் செயற்பாடுகளை விரைவுபடுத்துதல் ஆகிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஓய்வுபெறும் வயது நீடிப்பு மேன்முறையீட்டு அல்லது உயர் நீதிமன்ற நீதியரசர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாது எனவும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்து மட்டங்களிலும் பணியாற்றும் நீதிபதிகள் மற்றும் நீதவான்களுக்கும் இந்த மாற்றம் பொதுவானதாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதால் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது எனவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த சட்டத்திருத்தம் குறிப்பிட்ட ஒரு தனிநபரை இலக்காகக் கொண்டு அவசரமாகக் கொண்டுவரப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது ஒட்டுமொத்த நீதித்துறை அமைப்பையும் சீரமைத்து வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கோ அல்லது அவர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கோ சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டில் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டபோதும் மக்களின் விருப்பம் பெறப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Source: https://samugammedia.com/this-decision-is-to-settle-11-million-pending-cases-law-minister-explains-about-extending-the-retirement-age-of-judges-1785251034

NO COMMENTS

Exit mobile version