Home இலங்கை சமூகம் இலங்கையில் நெகிழ்ச்சி செயல் – மாணவிக்காக ஒன்றுகூடிய மக்கள் – சினிமா பாணியில் நடந்த சம்பவம்

இலங்கையில் நெகிழ்ச்சி செயல் – மாணவிக்காக ஒன்றுகூடிய மக்கள் – சினிமா பாணியில் நடந்த சம்பவம்

0

குருநாகல் மாவட்டத்தின் அலவ்வ ராகுல மகா வித்தியாலத்தில் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சை நிலையத்திற்கு பரீட்சை எழுத சென்ற மாணவி தற்செயலாக வேறொரு ரயிலில் ஏறியதால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த மாணவியை, பரீட்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கு ரயில்வே அதிகாரிகள் விரைந்து செயற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் பதிவாகி உள்ளது.

முதல் முறையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 19 வயது மாணவி, அலவ்வ செல்லும் நோக்கத்துடன் மீரிகம ரயில் நிலையத்திலிருந்து ரயிலில் ஏறியுள்ளார்.

மாணவி அதிர்ச்சி

எனினும், சனிக்கிழமை காலை கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியதால், ரயில் அலவ்வ ரயில் நிலையத்தில் நிற்காமல் பயணித்துள்ளது.

இதனையடுத்து தவறான ரயிலில் ஏறியமை குறித்து மாணவி அதிர்ச்சி அடைந்து அழுதுள்ளார்.

இதன் போது குறித்த ரயிலில் பயணித்த விரிவுரையாளர் சுரஞ்சித் ரத்னபால, மாணவியை சமாதானம் செய்ததுடன், பரீட்சை நிலையத்திற்கு அனுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.

ரயில் சிக்னலில் நிறுத்தப்படும் போது இறங்கி முச்சக்கர வண்டியில் பரீட்சை நிலையத்திற்கு செல்லுமாறும் அதற்கான நிதியுதவி தருவதாக ரயிலில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.

மனிதாபிமான செயல்

எனினும் அங்கிருந்து வயல்வெளிகளால் சென்று முச்சக்கர வண்டியை பிடிக்க கால அவகாசம் எடுக்கும் என்பதால், மாணவி மேலும் கலக்கமடைந்துள்ளார்.

விரைந்து செயற்பட்ட விரிவுரையாளர் சுரஞ்சித், ரயில்வே கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் தனது பல்கலைக்கழக நண்பரான சஜித் விக்ரமசிங்கவுடன் தொடர்பு கொண்டு நிலைமையை தெளிவுபடுத்தியுள்ளார்.

மனிதாபிமானத்தை மனதில் கொண்டு தனது கடமையை மீறி செயல்பட்ட சஜித் விக்ரமசிங்க, உடனடியாக பொல்கஹவெல நிலைய அதிபரை அழைத்து கண்டியிலிருந்து கொழும்புக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை பொல்கஹவெலவில் நிறுத்த ஏற்பாடு செய்தார்.

அதற்கமைய, மாணவி சென்ற ரயில் பொல்கஹவெலவை அடைந்தவுடன், நிறுத்தப்பட்டிருந்த மற்ற ரயிலில் அவரை ஏற்றி அலவ்வவிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

குறித்த மாணவி அலவ்வவில் இறங்கியதும் முச்சக்கர வண்டியின் மூலம் உரிய பரீட்சை நிலையத்திற்கு செல்வதற்கான ஒழுங்குகளை, ரயில்வே பாதுகாப்பு அதிகாரி நிமல் ரூபசிங்க மேற்கொண்டிருந்தார்.

NO COMMENTS

Exit mobile version