இலங்கைக்கு தெற்கே கடலில் மீன்பிடி இழுவைப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையின் மூலம் இந்தோனேசிய கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இன்று (25.06.2026) இலங்கை கடற்படை வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KM Garuda Jaya VI என்ற இந்தோனேசிய கடற்றொழில் இழுவைப் படகில் பயணித்த 25 கடற்றொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 22ஆம் திகதி படகு கவிழ்ந்ததைத் தொடர்ந்து ஆபத்தில் சிக்கியிருந்தனர்.
இலங்கையிலுள்ள இந்தோனேசிய தூதரகம்
இந்தச் சம்பவம் அவுஸ்திரேலியாவின் தேடுதல் மற்றும் மீட்பு பிராந்தியத்திற்குள் இடம்பெற்றதாகவும், அங்கு கடற்றொழிலாளர்கள் ஆபத்தில் இருப்பதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, MV Moonstone என்ற வர்த்தகக் கப்பல் நீரில் தத்தளித்த 25 கடற்றொழிலாளர்களையும் பாதுகாப்பாக மீட்டு, கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு (MRCC) தகவல் வழங்கியது.
தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, MRCC கொழும்புடன் ஒருங்கிணைந்து இலங்கை கடற்படை இரண்டு கடற்படை படகுகளை அனுப்பி மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்களை கரைக்கு அழைத்து வந்தது.
இதன்படி, 25 கடற்றொழிலாளர்களும் நேற்று (24) மாலை பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளும் வழங்கப்பட்டன.
பின்னர் மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக இலங்கையிலுள்ள இந்தோனேசிய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Source: https://ibctamil.com/article/25-indonesian-fishermen-rescued-safely-to-colombo-1790312254
